ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.
இந்திய அணியில் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் மற்றும் முகமது சமி ஆகியோருக்கு பதிலாக சுப்மன்கில், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.
டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் கேப்டன் ரோகித்சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்கவீரர்களாக களமிறங்கினர்.
ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பெரும் கண்டத்திலிருந்து தப்பினார் ரோகித். பந்து பேட்டில் பட்டு அவுட் கேட்கப்பட, நடுவர் அவுட் வழங்கவில்லை. அதன்பின் அல்ட்ரா எட்ஜில் பந்து பேட்டில் உரசி சென்றது தெரிய வந்தது.
இதனை பயன்படுத்திகொண்ட ரோகித் அடித்து ஆட முயற்சித்தார். அவருடன் சுப்மன் கில்லும் சேர்ந்து ஆரம்பத்தில் பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டனர்.
ஆனால் முதல் விக்கெட்டுக்கு 27 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடியை ரோகித் சர்மா(12) விக்கெட் மூலம் ஆஸ்திரேலியாவின் குனேமேன் பிரித்தார்.
அவரைத்தொடர்ந்து சுப்மன் கில்லும் 21 ரன்களில் வெளியேற, ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்க தொடங்கியது.
அடுத்து வந்த வீரர்களில் விராட்கோலி மட்டுமே 20 ரன்களை கடந்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

உணவு இடைவெளியின்போது, இந்திய அணி 26 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் மீதமிருந்த 3 விக்கெட்டுகளையும் இழந்து 33.2 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.
கடைசி கட்டத்தில் அக்ஸர் பட்டேல் (12*) மற்றும் உமேஷ் யாதவின் (17) ஆறுதலான பேட்டிங் காரணமாக இந்தியா 100 ரன்களை கடந்தது.
எனினும் கடந்த 15 ஆண்டுகளில் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், 4வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது இந்திய அணி.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக குனேமேன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும், டோட் முர்பி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன் மூலம் ஆசிய நாடுகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னேவை(127) பின்னுக்கு தள்ளி நாதன் லயன் (130*) முதலிடம் பிடித்தார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா இதுவரை 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் குவித்து ஆடி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
வருமானவரித் துறைக்கு எதிரான வழக்கு : வாபஸ் வாங்கிய பன்னீர்
ஸ்டாலின் போலீசா? அமித் ஷா போலீசா? ராஜினாமா மூடில் திருமாவளவன்: சிறுத்தையின் சீற்றப் பின்னணி!