சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் 11வது நாளில், இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம், பதக்கப் பட்டியலில், 18 தங்கம், 31 வெள்ளி மற்றும் 32 வெண்கலம் என 81 பதக்கங்களுடன், இந்தியா தொடர்ந்து 4வது இடத்தில் நீடிக்கிறது.
தங்க மகனுக்கு ‘தங்கம்’
தடகள போட்டிகளின் ஈட்டி எறிதல் பிரிவில், பல சர்ச்சைகளுக்கு பிறகு இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். இவர் 88.88 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்த பதக்கத்தை கைப்பற்றினார்.
இவரை அடுத்து, இதே பிரிவில் மற்றொரு இந்தியரான கிஷோர் குமார் ஜனா 87.54 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மேலும், இதன்மூலம் 2024ம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கும், நீரஜ் சோப்ராவுடன் கிஷோர் குமார் ஜனா நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.
தடகள போட்டிகளில் தொடரும் ஆதிக்கம்
ஆடவர் 4 x 400 மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில், கமது அனஸ், ராஜேஷ் ரமேஷ், அமோஜ் ஜேக்கப் மற்றும் முகமது அஜ்மல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த பிரிவில், 1962ம் ஆண்டுக்குப் பின், இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, மகளிர் 4 x 400 மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில், ஐஸ்வர்யா மிஸ்ரா, சுபா வெங்கடேசன், பிராச்சி மற்றும் வித்யா ராம்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது.
5000 மீ ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவின் அவினாஷ் சப்லே வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். முன்னதாக, இவர் 3000 மீ ஸ்டீபில்சேஸ் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
800 மீ ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவின் ஹர்மிலன் பெய்ன்ஸ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். 23 வயதான இவருக்கு, இந்த ஆசிய போட்டிகளில் இது 2வது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 1500 மீ ஓட்டப் பந்தயத்திலும் ஹர்மிலன் பெய்ன்ஸ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தார்.
முன்னதாக, 35 கி.மீ கலப்பு தொடர் ஓட்டப்பந்தய பிரிவில், இந்தியாவின் மஞ்சு ராணி – பாபு ராம் இணை வெண்கல பதக்கத்தை வென்றது. இதன்மூலம், 11வது நாளில் மட்டும் தடகள போட்டிகளில், இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.
வில்வித்தையில் த்ரில் வெற்றி
முன்னதாக, வில்வித்தை காம்பௌண்ட் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ஜோதி வெண்ணம் – ஓஜஸ் டியோடேல் இணை, கொரிய இணையை 159 – 158 என வீழ்த்தி, த்ரில் வெற்றியுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
மகளிருக்கான குத்துச்சண்டை 75 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் லவ்லினா பார்கோஹைன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அதேபோல, மகளிர் 57 கிலோ எடை பிரிவில், பர்வீன் ஹூடா வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
ஆடவர் மல்யுத்தம் 87 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் சுனில் குமார் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். 2010ம் ஆண்டிற்கு பிறகு, மல்யுத்தத்தின் கிரெக்கோ ரோமன் பிரிவில், இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் அனாஹத் சிங் – அபே சிங் இணை வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்: கூட்டணி முடிவுகள் வெளியாகுமா?