அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் நேற்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்தின் தொடக்க வீரர்களை 11 மாதங்கள் கழித்து அணிக்கு திரும்பிய பும்ரா தனது டிரேட் மார்க் பந்துவீச்சால் சாய்த்தார்.
தொடக்க வீரர் பால்பிர்னியை கிளின் போல்டாக்கிய பும்ரா, அடுத்து வந்த டக்கரை டக் அவுட் செய்து வெளியேற்றினார்.
Boom Boom Bhumra On Fire With 2 Wickets In First Over With ComeBack Match #IREvIND #JaspritBumrah pic.twitter.com/eyR6SxJ5bK
— Sunrisers Hyderabad FC (@fc_sunrisers) August 18, 2023
இதனால் 4 ரன்களுக்கு 2 விக்கெட் என ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது அயர்லாந்து. தொடர்ந்து ஆடிய அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 139 ரன்களை குவித்தது.
அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய பாரி மெக்கார்தி 51 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டும், அர்ஸ்தீப் சிங் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்தியா.
தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா டக் அவுட்டாகி வெளியேறினார்.
எனினும் மற்றொரு தொடக்க வீரர் ருத்துராஜ் (19), சஞ்சு சாம்சன் (1) ஆகியோர் தொடர்ந்து விளையாடிய நிலையில் மழை குறுக்கிட்டது. அப்போது இந்திய அணி 6.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது.
ஆட்டத்தை தொடர முடியாதபடி அங்கு தொடர்ந்து மழை பெய்த நிலையில் கடைப்பிடிக்கப்பட்ட டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் கேப்டன்ஷிப் பொறுப்பேற்ற பும்ரா தலைமையில் முதல் வெற்றியை பதிவு செய்து, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை சாய்த்து அயர்லாந்துக்கு அதிர்ச்சிக் கொடுத்த கேப்டன் பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா