IND vs SA: அபார வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்திய மகளிர் அணி!

விளையாட்டு

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி, 3 டி20, 1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது.

இதில், முதலாவதாக பெங்களுருவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில், 3 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என தொடரை கைப்பற்றியது.

இதை தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி பேட்டிங், சினே ராணாவின் மிரட்டலான பந்துவீச்சால், அந்த போட்டியிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து, அதே சேப்பாக்கம் மைதானத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இந்த தொடரின் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்கா 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி மழையால் ரத்தானது.

இதனால், தொடரை சமன் செய்ய வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் 3வது போட்டியில் இந்தியா களமிறங்கியது. ஜூலை 9 அன்று நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து, பூஜா வஸ்திரகர் மற்றும் ராதா யாதவின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல், அந்த அணி 84 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இப்போட்டியில், பூஜா வஸ்திரகர் 4 விக்கெட்களையும், ராதா யாதவ் 3 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர். தென் ஆப்பிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக டஸ்மின் பிரிட்ஸ் 20 ரன்களை சேர்த்தார்.

இதை தொடர்ந்து 85 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி கமிறங்கிய இந்திய அணிக்காக, ஸ்மிருதி மந்தனா அரைசதம் விளாசி அசத்தினார். மந்தனா 54 ரன்களையும், ஷபாலி வர்மா 27 ரன்களையும் சேர்க்க, இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் இந்த தொடரை நிறைவு செய்துள்ளது.

மேலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இந்த போட்டிக்கான ‘ஆட்ட நாயகி’ விருதையும், இந்த தொடருக்கான ‘தொடர் நாயகி’ விருதையும் பூஜா வஸ்திரகர் வென்று அசத்தியுள்ளார். இவர் இந்த தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் 8 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அபார வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், “அடுத்து ஆசிய கோப்பை தொடர் நெருங்குகிறது. நாங்கள் அங்கும் இதேபோல சிறப்பாக செயல்பட விரும்புகிறோம்”, என தெரிவித்துள்ளார்.

ஜூலை 19 அன்று துவங்கவுள்ள இந்த தொடரின் முதல் நாளிலேயே, இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணிகவரித் துறையில் ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

களையிழந்து காணப்படும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்: காரணம் என்ன?

ஹெல்த் டிப்ஸ்: இரவு நேர உடற்பயிற்சி ஆரோக்கியமானதா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0