IND vs ZIM: 2024 உலகக்கோப்பை தொடரை வென்ற பிறகு, ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த தொடரில் முதல் போட்டி ஹராரே மைதானத்தில் நேற்று (ஜூலை 6) அன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இப்போட்டியில் இந்திய அணிக்காக விளையாட சுப்மன் கில்லுடன், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாத், ரியான் பராக், ரிங்கு சிங், துருவ் ஜூரேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னாய், ஆவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அகமது ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
டாஸை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு இன்னொசென்ட் கையா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 6வது ஓவரில் பிரைன் பென்னட் (22 ரன்கள்) விக்கெட்டை ரவி பிஸ்னாய் கைப்பற்ற, பவர்-பிளே முடிவில் 2 விக்கெட்களை இழந்த ஜிம்பாப்வே, 40 ரன்களை சேர்த்திருந்தது.
தொடர்ந்து, ரவி பிஸ்னாய் & வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ஜிம்பாப்வே அணி வீரர்கள் சீரான வேகத்தில் விக்கெட்களை பறிகொடுத்தனர்.
இதன் காரணமாக, ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
அந்த அணிக்காக மதேவேரே 22 ரன்களும், சிக்கந்தர் ராஸா 17 ரன்களும், டியான் மேயர்ஸ் 23 ரன்களும். கிளைவ் மடான்டே 29 ரன்களும் சேர்த்திருந்தனர். இந்தியாவுக்காக ரவி பிஸ்னாய் 4 விக்கெட்களையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர்.
இதை தொடர்ந்து, 116 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்கத்திலேயே ஜிம்பாப்வே அணி பெரும் அதிர்ச்சி அளித்தது.
அபிஷேக் சர்மா (0), ருதுராஜ் கெய்க்வாத் (7), ரியான் பராக் (2), ரிங்கு சிங் (0) என அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, பவர்-பிளே முடிவில் 4 விக்கெட்களை இழந்த இந்திய அணி 28 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
ஜிம்பாப்வேவின் மிரட்டலான பந்துவீச்சு தொடர, 10 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்த இந்தியா 43 ரன்களை மட்டுமே சேர்த்தது. 11வது ஓவரிலேயே நம்பிக்கை அளித்து விளையாடி வந்த சுப்மன் கில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 27 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தலும், அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இறுதியில் இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன்மூலம், 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே, 2024-இல் டி20 போட்டிகளில் முதல் தோல்வியை இந்தியாவுக்கு பரிசளித்துள்ளது.
அந்த அணிக்காக, சடரா மற்றும் கேப்டன் ராஸா தலா 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.
மேலும், இந்த வெற்றியின் மூலம், இந்திய அணிக்கு எதிராக மிகக்குறைந்த ரன்களை டிபென்ட் செய்த அணி என்ற பெருமையையும் ஜிம்பாப்வே பெற்றுள்ளது. முன்னதாக, நியூசிலாந்து அணி 127 ரன்களை டிபென்ட் செய்ததே சாதனையாக இருந்தது.
அதுமட்டுமின்றி, சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து 12 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த போட்டியில் அந்த வெற்றிப் பயணத்தை ஜிம்பாப்வே அணி முறித்துள்ளது.
இந்நிலையில், இந்த அணிக்கு எதிரான 2வது போட்டியில் இந்திய அணி இன்று (ஜூலை 7) விளையாட உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்று ஜிம்பாப்வே அணிக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இப்போட்டியும் அதே ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
’குறுகிய இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை புதைக்க முடியாது’ : ஹத்ராஸ் சம்பவத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி!