IND vs SL 2nd T20 2024: புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர், புதிய டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் என ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கிய இந்திய ஆடவர் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நிலையில், பல்லேகேலே சர்வதேச மைதானத்தில் நேற்று (ஜூலை 29) இரவு நடைபெற்ற 2வது போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார்.
டாஸை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இலங்கைக்கு, குஷல் மெண்டிஸ் 11 ரன்களுக்கு வெளியேறினாலும், அடுத்து ஜோடி சேர்ந்த பதும் நிசங்கா & குஷல் பெரேரா ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். பதும் நிசங்கா 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, குஷல் பெரேராவின் பார்ட்னர்ஷிப் கமிண்டு மெண்டிஸுடன் தொடர்ந்தது.
ஆனால், கமிண்டு மெண்டிஸ் 26 ரன்களுக்கும், குஷல் பெரேரா 53 ரன்களுக்கும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். 2 பேரின் விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினார் ஹர்திக் பாண்டியா.
இதை தொடர்ந்து, இலங்கை அணி மளமளவென விக்கெட்களை இழக்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது. ரவி பிஸ்னாய் 3 விக்கெட்களையும், அர்ஷ்தீப், அக்சர், ஹர்திக் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, 162 ரன்கள் என்ற இலக்கை எதிர்நோக்கி களமிறங்கிய நிலையில், முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. அதன் காரணமாக, ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டு, இந்திய அணிக்கு 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
புதிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, சஞ்சு சாம்சன் 2வது ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 26 (12) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மற்றோரு துவக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 (15) ரன்கள் குவித்து வெளியேறினார்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 22 ரன்கள் விளாச, 7வது ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா, 7 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு அபாரமான வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் 2-0 என இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில், 3 விக்கெட்களை கைப்பற்றிய ரவி பிஸ்னாய் ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் இந்த தொடரின் 3வது & கடைசி டி20 போட்டி, இதே பல்லேகேலே சர்வதேச மைதானத்தில் ஜூலை 30 அன்று நடைபெறவுள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை சாதித்தது என்னென்ன?
இந்தியா தோல்வி.. முதன்முறையாக ஆசிய கோப்பை வென்ற இலங்கை மகளிர் அணி
தாம்பரத்தைத் தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலைய இடிப்பு பணி தீவிரம்!