IND vs SL: மிரட்டிய ஜெஃப்ரி வெண்டர்சே… இந்தியா படுதோல்வி!

Published On:

| By Selvam

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 3 டி20ஐ மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இவற்றில், முதலாவதாக நடைபெற்ற டி20ஐ தொடரில் 3 போட்டிகளையும் வென்ற இந்தியா, 3-0 என தொடரை கைப்பற்றியது.

தொடர்ந்து, கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா – இலங்கை விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், ஆகஸ்ட் 4 அன்று நடைபெற்ற 2வது போட்டியில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இலங்கை அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக கருதப்பட்ட வணிந்து ஹசரங்கா, காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்ட ஜெஃப்ரி வெண்டர்சேவுக்கு நேற்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

டாஸிற்கு பிறகு முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு, பதும் நிசங்கா முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த அவிஷ்கா பெர்னாண்டோ (40 ரன்கள்) மற்றும் குஷல் மெண்டிஸ் (30 ரன்கள்) 2வது விக்கெட்டிற்கு 74 ரன்கள் சேர்த்து அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.

பின் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த டுனித் வெல்லலகே (39 ரன்கள்) மற்றும் கமிண்டு மெண்டிஸ் (40 ரன்கள்), அந்த விக்கெட்டிற்கு 72 ரன்கள் சேர்க்க, இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியாவுக்காக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அபாரமான துவக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் குவித்து அசத்தியது.

ஆனால், அப்போதுதான் தனது மாயாஜாலத்தை நிகழ்த்தினார், புதிதாக அணியில் சேர்க்கப்பட்ட ஜெஃப்ரி வெண்டர்சே. ரோகித் சர்மா, சுப்மன் கில் துவங்கி, அடுத்து வந்த விராட் கோலி, ஷிவம் துபே, ஷ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் என இந்திய அணியின் 6 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை அசால்டாக தூக்கினார், ஜெஃப்ரி வெண்டர்சே.

97-1 என்ற நல்ல நிலையில் இருந்த இந்தியா 147-6 என்ற இக்கட்டான சூழலுக்கு சென்றது. பின் களத்தில் இருந்த அக்சர் பட்டேல் 44 ரன்கள் சேர்த்து சிறிது ஆறுதல் அளித்தார். ஆனால், வெண்டர்சேவை தொடர்ந்து பந்துவீச்சில் மிரட்டிய இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா, கடைசியில் அக்சர் படேல் உட்பட 3 பேரின் விக்கெட்களை கைப்பற்ற, இந்திய அணி 208 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன்மூலம், 32 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு மோசமான தோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது. முதல் போட்டியிலும் இந்திய அணி ஆல்-அவுட் ஆகி ஆட்டம் சமனில் முடிந்த நிலையில், தற்போது 1-0 என்ற இலங்கை அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

எவ்வித சந்தேகமும் இன்றி, இப்போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்த ஜெஃப்ரி வெண்டர்சே ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றுள்ளார்.

இந்த தோல்வியை தொடர்ந்து, இந்த தொடரை சமன் செய்ய ஆகஸ்ட் 7 அன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

16 ஆண்டுகள் காத்திருப்பு… ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ‘ஜோகோவிக்’ வரலாறு!

ராகுல் காந்தி, கமலா ஹாரிஸ்: பிற்போக்கு தேசியம் கேட்கும் ஒற்றை அடையாளம்

டாப் 10 நியூஸ்: நெல்லை மேயர் தேர்தல் முதல் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு வரை!

கிச்சன் கீர்த்தனா: மட்டன் முருங்கைக்கீரை சூப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share