ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து, இந்தியாவின் முழு நேர டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
தற்போது, அவர் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் விளையாடுகிறது.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொண்ட கவுதம் கம்பீருக்கும் இதுவே முதல் தொடர் என்பதால், இந்த தொடர் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரின் முதல் டி20ஐ போட்டி பல்லேகேலே சர்வதேச மைதானத்தில் நேற்று (ஜூலை 27) இரவு நடைபெற்றது. இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து, இந்தியாவுக்கு துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யசஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் சுப்மன் கில் ஒரு அதிரடியான துவக்கத்தை வழங்கினர்.
இந்த ஜோடி பவர்-பிளேவில் 74 ரன்கள் விளாசியது. ஆனால், ஜெய்ஷ்வால் 40(21) ரன்களுக்கும், கில் 34(16) ரன்களுக்கும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 58(26) ரன்கள் விளாசி அசத்தினார். அவருக்கு துணையாக ரிஷப் பண்ட் 49(33) ரன்கள் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் சேர்த்தது. மத்தீஷா பதிரானா 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
தொடர்ந்து 214 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு, பதும் நிசங்கா & குஷல் மெண்டிஸ் இணை யாரும் எதிர்பார்க்காத துவக்கத்தை வழங்கியது.
பவர்பிளேவில் 55 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியின் அதிரடி அடுத்த ஓவர்களில் தொடர, 10 ஓவர்களில் 99 ரன்கள் குவித்தது.
பதும் நிசங்கா 79(48) ரன்களுக்கும், குஷல் மெண்டிஸ் 45(27) ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
ரியான் பராக், அக்சர் படேல், ரவி பிஸ்னாய் ஆகியோரின் சுழல் தாக்குதலில் சிக்கி, இலங்கை அணி 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன்மூலம், இந்திய அணி முதல் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணிக்காக ரியான் பராக் 3 விக்கெட்கள், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
8 ஃபோர், 2 சிக்ஸ் என 26 பந்துகளில் 58 ரன்கள் விளாசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: வழுக்கை விழுவதைத் தடுக்கலாம்… எப்படி?
ஹெல்த் டிப்ஸ்: ஆடுசதையில் பிடிப்பா… அலட்சியம் வேண்டாம்!
டாப் 10 நியூஸ் : புதிய ஆளுநர்கள் நியமனம் முதல் தனுஷ் பிறந்தநாள் வரை!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சாப்பிட்டதும் ஜூஸ் குடிப்பவரா நீங்கள்?