இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதனால் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நியூசிலாந்து அணி வீரர்களின் அதிரடியான பந்துவீச்சால் 155 ரன்களில் சுருண்டது.
இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சும், தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததும் காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று நடைபெற உள்ள இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் டி20 கிரிக்கெட் தொடரை இழப்பதுடன், டி20 தர வரிசையில் நம்பர் 1 என்ற இடத்தையும் இழக்க நேரிடும்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகிறது.
முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பந்துவீச்சை நியூசிலாந்து அணி வீரர்கள் எல்லைக்கோட்டிற்குப் பறக்கவிட்டனர். குறிப்பாக அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்திய அணியின் தோல்விக்கு அவரது பந்துவீச்சு முக்கியமான காரணம் என்று விமர்சிக்கப்பட்டது.
தொடக்கத்தில் வேகப்பந்திற்கும் பின்னர் சுழற்பந்திற்கும் ஏற்றவாறு இருக்கும் லக்னோ ஆடுகளத்தில் ஷிவம் மவி, உம்ரான் மாலிக், ஆர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினால் மட்டுமே நியூசிலாந்து அணி வீரர்களுக்கு முட்டுக்கட்டை போட முடியும்.
பேட்டிங்கை பொறுத்தவரை, சுப்மான் கில், இஷான் கிஷண், ராகுல் திரிபாதி உள்ளிட்டோர் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிக்க வேண்டும். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டவர்களும் நிலைத்து நின்று ஆட வேண்டும். கடந்த போட்டியில் இந்திய அணி 15 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனால் நியூசிலாந்து அணி வீரர்கள் இந்திய அணியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
அதேபோல் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ஒரு ஓவரில் 16 ரன்கள் எடுத்ததால் உம்ரான் மாலிக்கிற்கு பந்து வீச வாய்ப்பு மறுத்தது, லோயர் மிடிலில் ஆடக்கூடிய தீபக் ஹூடாவை 7-வது வீரராக களமிறக்கியது விமர்சனத்திற்குள்ளாகியது. அவர் தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
லக்னோ மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 5 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி 2 ஆட்டங்களில் ஆடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஆடுகளம் முதலில் வேகப்பந்து வீச்சிற்கும் பின்னர் சுழற்பந்திற்கும் ஏற்றதாக உள்ளது.
2012-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வெற்றி பெறாததால் இந்த தொடரை வெல்ல கூடுதல் முனைப்பு காட்டி வருகிறது.
செல்வம்
திருப்பதி : கோலாகலமாக நடந்த ரத சப்தமி விழா!
முட்டை மீது யோகா: உலக சாதனை படைத்த சகோதரிகள்!