இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி நேற்று (ஜனவரி 27) ராஞ்சியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி களமிறங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.
வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகள், குல்தீப் யாதவ் 1 விக்கெட், ஷிவம் மவி 1 விக்கெட் எடுத்திருந்தனர்.
19 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் மட்டும் நியூசிலாந்து அணி 27 ரன்கள் எடுத்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இறுதியில் இந்திய அணியானது 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்ட்யா, “ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்று இரண்டு அணிகளாலும் கணிக்க முடியவில்லை. நியூசிலாந்து அணி எங்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
நானும் சூர்யகுமார் யாதவும் பேட்டிங் செய்தவரை வெற்றி பெற்று விடலாம் என்று தான் நினைத்திருந்தோம். பந்துவீச்சில் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட நாங்கள், இறுதியில் சொதப்பி விட்டோம்.
25 ரன்கள் அதிகமாக கொடுத்து விட்டோம். எங்களுடைய வீரர்கள் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள்.” என்று தெரிவித்தார்.
இந்திய அணியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவின் தவறான கேப்டன்சி தான் காரணம் என்று விவாதம் எழுந்துள்ளது.
அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி என்று இந்திய அணியில் மூன்று பவுலர்கள் இருந்த போது ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முதலில் ஓவரை வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்த்கிக் பாண்டியா முதல் ஓவரில் 12 ரன்களை விட்டுக்கொடுத்தாலும் அவர் அடுத்தடுத்து பந்து வீசினார். ஆனால் உம்ரான் மாலிக் ஒரு ஓவரில் 16 ரன்கள் கொடுத்தார் என்பதற்காக அவருக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தீபக் ஹூடா டாப் ஆர்டர் அல்லது ஓப்பனிங்கில் விளையாடக்கூடியவர். முதல் மூன்று ஓவர்களில் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தபோது தீபக் ஹூடாவை மூன்றாவது விக்கெட்டை இழந்தபோது களமிறக்கி இருக்கலாம்.
ஆனால் லோயர் ஆர்டரில் ஆடும் பாண்டியா தீபக் ஹூடாவை களமிறக்காமல் அவர் இறங்கினார். இதன்காரணமாக தீபக் ஹூடா 7-வது விக்கெட்டிற்கு தான் களமிறங்கினார். அதனால் அவரால் தனது ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் 10 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
ராஞ்சி ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தது. இதனால் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி நியூசிலாந்து அணி வீரர்களை திணற வைத்தனர். இருவரும் தலா 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
சுழற்பந்து ஆல்ரவுண்டரான தீபக் ஹூடாவிற்கு 2 ஓவர்கள் மட்டுமே பாண்டியா கொடுத்தார். அவருக்கு மேலும் ஒரு ஓவரை கொடுத்திருந்தால் அர்ஷ்தீப் சிங்கிற்கு கடைசி ஓவரை கொடுக்க தேவை இருந்திருக்காது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பாண்டியா தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதால் மற்ற வீரர்களின் ஆட்டம் பாதிக்கப்படுவதாக ரசிகர்கள் பாண்டியாவை விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் கேப்டன் என்கிற முறையில் பாண்டியா ஆடுகளத்தின் சூழ்நிலை அறிந்து ஆடுவதாக ஒருபுறம் ரசிகர்கள் அவருக்கு தெரிவிக்கின்றனர்.
செல்வம்