IND vs ENG: 2023 உலகக்கோப்பை தொடரின் 29வது லீக் போட்டியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டன.
ஒருபுறம், இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்தியா களமிறங்கியது.
மறுபுறம், அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள வெற்றி தேவை என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து களமிறங்கியது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் முதலில் பந்துவீசியதை மேற்கோள் காட்டி, “நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம்”, என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். இரு அணிகளுமே, எந்த ஒரு மாற்றமும் இன்றி அதே அணியுடன் களமிறங்கின.
இதை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு, இங்கிலாந்தில் டேவிட் வில்லே & கிறிஸ் வோக்ஸ் இணை பந்துவீச்சில் ஒரு மிரட்டலான வரவேற்பை வழங்கியது.
முதல் 10 ஓவர்களில், சுப்மன் கில் 9 ரன்களுக்கும், விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேற, இந்தியாவால் 35 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
கிறிஸ் வோக்ஸ்-ன் இந்த மிரட்டலான பந்துவீச்சு அடுத்தும் தொடர, ஷ்ரேயஸ் அய்யர் 4 ரன்களுக்கு அவரின் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆனால், மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா, அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுலுடன் இணைந்து ரன்களை சேர்க்க துவங்கினார்.
ராகுல் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவுடன் தனது பார்ட்னர்ஷிப்பை தொடர்ந்தார் ரோகித் சர்மா.
ஆனால், அவர் சதம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக 87 ரன்களுக்கு வெளியேறினார்.
இவரை தொடர்ந்து, சூர்யகுமார் யாதவும் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்தியாவால் 229 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இங்கிலாந்துக்காக டேவிட் வில்லே 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
ரோகித் சர்மா புதிய சாதனை
இதற்கிடையில், ரோகித் சர்மா இன்றைய தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 18,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த இலக்கை எட்டும், 20வது கிரிக்கெட் வீரர் மற்றும் 5வது இந்தியர் என்ற பெருமையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
முன்னதாக, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டுமே, இந்தியாவுக்காக இந்த இலக்கை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பை போட்டிகளில், இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த பட்டியலில், விராட் கோலி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமிதாப் பச்சனுடன் அசத்தும் ரஜினிகாந்த் : தலைவர் 170 அப்டேட்!
வேலைவாய்ப்பு : fssai-யில் பணி!