Jaiswal hit a first double century
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில், முதல் போட்டியில், பேட்டிங்கில் ஒல்லி போப், பவுலிங்கில் டாம் ஹார்ட்லி ஆகியோரின் அதிரடியால், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2 துவங்கிய 2வது டெஸ்ட் போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முன்னதாக அறிவித்தது போல, ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் இப்போட்டியில் இருந்து விலகினர். அவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ராஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டனர்.
அதேபோல, முகமது சிராஜுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டார்.
இங்கிலாந்து அணியும் ஜாக் லீச், மார்க் வுட் ஆகியோருக்கு பதில் ஷோயப் பஷீர், ஜேம்ஸ் ஆன்டர்சன் என 2 மாற்றங்களுடன் களமிறங்கியது.
இப்போட்டியில், ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்தியாவுக்கு துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ரோகித் சர்மா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், ஜெய்ஸ்வால் சீரான வேகத்தில் அணிக்கு ரன்களை சேர்த்தார். மறுமுனையில் அடுத்தடுத்து களமிறங்கிய சுப்மன் கில் (34 ரன்கள்), ஷ்ரேயஸ் அய்யர் (27 ரன்கள்), ராஜத் படிதார் (32 ரன்கள்) மற்றும் அக்சர் பட்டேல் (27 ரன்கள்) ஆகியோர் களத்தில் அவருக்கு துணையாக விளையாடினர்.
இதன்மூலம், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை சேர்த்தது. ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஷ்வின் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இன்று துவங்கிய 2வது நாள் ஆட்டத்தில், ஷோயப் பஷீர் வீசிய 102வது ஓவரில் முதல் 2 பந்துகளை சிக்ஸ் மற்றும் பவுண்டரிக்கு அனுப்பிய ஜெய்ஸ்வால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
இதன்மூலம், மிகக்குறைந்த வயதில் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், வினோத் காம்ப்ளி மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரை அடுத்து, ஜெய்ஸ்வால் 3வது இடம் பிடித்துள்ளார்.
19 பவுண்டரி, 7 சிக்ஸ்களுடன், 290 பந்துகளில் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இங்கிலாந்துக்காக ஜேம்ஸ் ஆன்டர்சன், ஷோயப் பஷீர் மற்றும் ரீஹன் அகமது தலா 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!
ஜெட் ஸ்பீட் கலெக்சன்: “ஃபைட்டர்” பாக்ஸ் ஆபிஸ் இதுதான்!
அண்ணா நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!
STR50: சிம்புவை இயக்கப்போவது யாருன்னு பாருங்க!
Jaiswal hit a first double century