இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணியின் சோயிப் பஷீரின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நேற்றைய நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்திருந்தது.
கடைசி வரை போராடிய ஜோ ரூட்
தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணிக்கு எதிராக 10வது சதம் கண்ட ஜோ ரூட் (106*) மற்றும் ஓல்லி ராபின்சன்(31*) இருவரும் களத்தில் இருந்தனர்.
இன்று (பிப்ரவரி 24) தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் அரைசதம் கண்ட ராபின்சன் (58), ரவீந்திர ஜடேஜா சுழலில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மற்ற இரு வீரர்களையும் டக் அவுட் செய்த ஜடேஜா இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸை 353 ரன்களில் முடிவுக்கு கொண்டு வந்தார்.
ஜோ ரூட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் (122*) இருந்த நிலையில், இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பஷீரின் ’சுழல்’ ஆதிக்கம்!
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் (38), ரஜத் படிதார் (17) மற்றும் ஜடேஜா (12) ஆகியோர் பாகிஸ்தான் வம்சாவளியான சோயிப் பஷீர் சுழலில் ஆடுத்தடுத்து வெளியேறினார்.
இதற்கிடையே தனது வழக்கமான அதிரடியை கைவிட்டு ஒருபுறம் நிதானமாக விளையாடி வந்த தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன், சர்ப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தார்.
ஜெய்ஸ்வால் அரைசதம் கண்ட நிலையில் 73 ரன்களில் அவரை பஷீர் கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார்.
சர்ஃபராஸ் கான் ஏமாற்றம்!
அவரைத்தொடர்ந்து தனது 2ஆவது போட்டியில் விளையாடி வரும் சர்ஃபராஸ் கான் அணியை சரிவில் இருந்து மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வினும் 1 ரன்னில் அவுட் ஆனார்.
தொடர்ந்து சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் 8வது விக்கெட்டுக்கு துருவ் ஜூரல் (30) மற்றும் குல்தீப் யாதவ் (17) ஆகியோர் மேற்கொண்டு விக்கெட் விழாமல் விளையாடி வருகின்றனர். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் சோயிப் பஷீர் 4 விக்கெட்டுகளையும், டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டுகளையும் ள் கைப்பற்றியுள்ளனர்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 134 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் தற்போது வலுவான நிலையில் இங்கிலாந்து அணி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தொடர் போராட்டம் எதிரொலி : 50 லட்சம் பேர் எழுதிய காவலர் தேர்வு ரத்து!
விலகியது ஏன்? – டெல்லியில் விஜயதரணி விளக்கம்!