இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றின் 4வது லீக் போட்டி, மழையால் தடைப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர்12 சுற்றுப் போட்டியில் 4வது லீக் ஆட்டத்தில் இன்று (நவம்பர் 2) இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக முன்னாள் கேப்டன் விராட் கோலி இறுதிவரை களத்தில் நின்று, 44 பந்துகளில் 64ரன்கள் எடுத்தார்.
அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 50 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 30 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச பேட்டர்கள், இந்திய பந்துவீச்சை ஆரம்பம் முதலே சிதறடித்தனர்.
காரணம், அரையிறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான புள்ளிப் பட்டியலில் இந்திய அணிக்கு அடுத்த இடத்தில் வங்கதேசம் இருக்கிறது.
இதனால், அந்த அணியும் இன்று ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதையடுத்தே, அந்த அணி வீரர்கள் நன்றாக ஆடி அடித்தளம் அமைத்துவந்த நிலையில், 7ஓவர்கள் முடிவில் மழை குறுக்கிட்டதால் தற்போது ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
7 ஓவர்களில் அவ்வணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்துள்ளது. இதில் துவக்க ஆட்டக்காரரான லிதன் தாஸ் 26 பந்துகளில் 7பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் உசைன் சாந்தோ 7 ரன்கள் எடுத்துள்ளார்.
மழை தொடர்ந்து பெய்தால், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி போட்டியின் வெற்றி முடிவு செய்யப்படும். இதில் எந்த அணிக்கு வெற்றி கிடைக்கிறதோ, அந்த அணி அரையிறுதிக்குச் செல்வதற்கு அதிக வாய்ப்பு கிட்டும்.
ஜெ.பிரகாஷ்
கே.எல்.ராகுல் ஃபார்முக்கு வர கவாஸ்கர் சொல்லும் வழி!
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்துக்கு 185 ரன்கள் இலக்கு!