ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றனர்.
இந்த தொடரின் முதல் போட்டியானது நேற்று (செப்டம்பர் 22) மொகாலியில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனால் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் எடுத்திருந்தது.
வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்து வலுவான கூட்டணி அமைத்தனர். வார்னர், 52 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித், 41 ரன்களில் வெளியேறினார்.
லபுஷேன் 39 ரன்கள், கேமரூன் கிரீன் 31 ரன்கள், ஸ்டாய்னிஸ் 29 ரன்கள், ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்கள், கம்மின்ஸ் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
10 ஓவர்கள் வீசிய ஷமி, 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். பும்ரா, அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். கிரீன் மற்றும் சாம்பா ரன் அவுட் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்வாட் களமிறங்கினர்.
இதில், இருவருமே இணைந்து முதல் விக்கெட்டிற்கு 142 ரன்கள் குவித்தனர். இந்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 77 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 71 ரன்கள் குவித்தார்.
இதன் மூலமாகத் தனது முதல் அரைசதத்தை இந்தப் போட்டியில் பதிவு செய்துள்ளார். இது அவரது 3ஆவது ஒருநாள் போட்டி ஆகும்.
இவரைத் தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு கேப்டன் கேஎல் ராகுல் களமிறங்கினார்.
சுப்மன் கில் 63 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உள்பட 74 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆடம் ஜம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து இஷான் கிஷான் 18 ரன்களில் ஆட்டமிழக்க கே.எல்.ராகுலுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார்.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்து வந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரி உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஜடேஜா 3 ரன்களும் கே.எல்.ராகுல் 58 ரன்களும் எடுத்து களத்திலிருந்த நிலையில் இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது.
இதனால் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
மோனிஷா
நீட் தகுதித் தேர்வு மோசடியே… இதோ இன்னொரு சான்று!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!