IND vs AUS :சேப்பாக்கம் மைதானத்தின் ரிப்போர்ட் இதோ!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது.
மும்பையில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 1-1 என்று சமன் செய்தது.
இந்நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளது. இந்த போட்டி நாளை (மார்ச் 22 ) சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளன.
40000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 1987 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெற்ற 22 ஒருநாள் போட்டிகளில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளை சந்தித்துள்ளது. 1 போட்டி மழையால் முடிவின்றி போனது.
ஆஸ்திரேலியா மொத்தமாக பங்கேற்ற 5 ஒருநாள் போட்டிகளில் 4 வெற்றிகளையும் 1 தோல்வியையும் பதிவு செய்துள்ளது.
இங்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்த வீரராக எம்.எஸ்.தோனி உள்ளார். அவர் (401) ரன்கள் எடுத்துள்ளார். இரண்டு சதங்களை பதிவு செய்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக கடந்த 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 194 ரன்கள் அடித்ததன் மூலம் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக உள்ளார்.
இந்த மைதானத்தில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரராக வங்கதேசத்தின் முகமது ரஃபீக் உள்ளார். அவர் (8) விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலராக வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த பவுலர் ரவி ராம்பால் உள்ளார். இந்தியாவுக்கு எதிராக, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
பிட்ச் ரிப்போர்ட்
சேப்பாக்கம் மைதானம் பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக தற்போது தமிழகத்தில் மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலை நிலவுவதால் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் பந்துகளால் அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்கள். ஆரம்பகட்ட சூழ்நிலைகளை புரிந்து கொண்டு விளையாடும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை அடிக்கலாம்.
இங்கு நடைபெற்று முடிந்த ஒருநாள் போட்டிகளின் அடிப்படையில் சராசரி ஸ்கோர் 259 ஆகும். இங்கு 13 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும் 8 போட்டிகளில் சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை எடுப்பது வெற்றியை உறுதியாக்கலாம்.
வெதர் ரிப்போர்ட்
நாளை (மார்ச் 22 ) சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் போட்டி முழுமையாக நடைபெறுமா இல்லை மழை வந்து போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்விகளுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ரூ. 14,000 கோடி கூட்டுறவு பயிர் கடன்!