ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் தொடருக்கு பிறகு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வந்தது.
முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனால் தொடரைக் கைப்பற்றப் போவது இந்தியாவா ஆஸ்திரேலியாவா என்ற எதிர்பார்ப்புகளோடு 3வது ஒருநாள் போட்டி நேற்று (மார்ச் 22) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காத நிலையில், மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்திருந்தார்.
கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மட்டும் டக் அவுட்டாக மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் 49 ஓவர்களில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும் சிராஜ் மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர்.
தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்தியா. இந்திய அணியில் தொடக்க ஜோடியே சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தொடக்க வீரரான கேப்டன் ரோகித் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணிக்காக ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்எதிர்பார்க்கப்பட்ட இளம் அதிரடி பேட்ஸ்மேன் கில் 37 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
சதம் அடித்து அதிரடி காட்டுவார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி அரைசதம் அடித்து 54 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
தொடர்ந்து ஹர்தீக் பாண்ட்யா (40), கே.எல். ராகுல் (32), ஜடேஜா (18), ஷமி (14) குல்தீப் யாதவ் (6), சிராஜ் (3) அக்சர் (2*) ரன்கள் எடுத்திருக்க சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதனால் 49.1 ஓவரிலேயே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனால் 21 ரன்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா அணியில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்த ஆஷ்டன் அகர் 2 விக்கெட்டுகளையும் சீன் அபோட் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் தலா 1 விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.
சொந்த மண்ணில் பலம் வாய்ந்த இந்திய அணி 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு நாள் தொடரைக் கைப்பற்றாமல் தவறவிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 4 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்வி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மோனிஷா
சென்னை – கோவை வந்தே பாரத்: எங்கெங்கு நிற்கும்?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!