ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று மூன்றாவது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணி.
இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற கடைசி போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
அதேவேளையில் ஏற்கனவே கோப்பையை இழந்துவிட்டாலும் குறைந்தபட்சம் 4 போட்டிகள் கொண்ட தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க ஆஸ்திரேலிய அணியும் வெற்றிக்கு வரிந்துகட்டும்.
இரு அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (மார்ச் 9) தொடங்குகிறது.
இந்நிலையில், உலகின் மிகப்பெரிய மைதானமாக உருவாகியுள்ள இந்த மைதானத்தின் புள்ளி விவரங்களை பற்றி இங்கு பார்ப்போம்:
1983 ஆம் ஆண்டு முதல் இங்கே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றாலும் 1.32 லட்சம் பார்வையாளர்கள் அமரக்கூடிய புதிய மைதானம் உருவாக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது.
2021ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் முதல் முறையாக தற்போது ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
மொத்தமாக இங்கு நடந்துள்ள 14 டெஸ்ட் போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா, 6 போட்டிகளை ட்ரா செய்துள்ளது. 2 போட்டிகளில் தோற்றுள்ளது.
இந்த மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் (771 ரன்கள்) உள்ளார்.
இங்கே ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 3 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்களாக உள்ளனர்.
அதிக அரை சதங்கள் அடித்த வீரராக இந்திய முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் (5) உள்ளார்.
இந்த மைதானத்தில் 36 விக்கெட்டுகளுடன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த வீரராக அனில் கும்ப்ளே உள்ளார்.
1983ம் ஆண்டு நடந்த போட்டியில் 83 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் எடுத்து இந்த மைதானத்தில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.
பிட்ச் ரிப்போர்ட்
இந்தியாவில் இருக்கும் இதர மைதானங்களைப் போலவே அகமதாபாத் மைதானமும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வருகிறது. இந்த மைதானத்தில் 338, 337, 236, 147 என்பது 1, 2, 3, 4 இன்னிங்ஸ்களின் சராசரி ஸ்கோராகும்.
சுழற்பந்துவீச்சில் இரண்டு அணிகளுமே சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளதால் யார் வெற்றிபெறுவார்கள் என்று கணிப்பது கடினம். அதேவேளையில் சுழலை சமாளித்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும் அணியே 4வது டெஸ்டில் வெற்றிபெறும் என்பது உறுதி!
மு.வா.ஜெகதீஸ் குமார்
போர்க்கப்பலில் தயாரான ‘ஆபரேஷன் அரபைமா’
இலவச பயணம் பெண்களின் உரிமை: முதல்வர் ஸ்டாலின்