இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று (மார்ச் 19 ) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர். ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை சந்தித்த இந்திய அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 26 ஓவர்களிலேயே அனைத்து விக்கெடுகளையும் பறிகொடுத்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பாக விராட் கோலி 31 ரன்களும் அக்சர் பட்டேல் 29 ரன்களும் ஜடேஜா 16 ரன்களும் அடித்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பாக மிட்சல் ஸ்டார்க் அற்புதமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 11 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 121 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி பெற்ற வெற்றியின் மூலம் இந்த தொடரானது தற்போது (1-1) என்ற முறையில் சமமாக உள்ளது.
இந்நிலையில், இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
அதன்படி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் நான்கு பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆவது இது ஆறாவது முறையாகும். இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய நான்கு வீரர்கள் இந்த போட்டியில் டக்அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் சுருண்ட இந்திய அணி!
+2 தேர்வு எழுதாத மாணவர்கள் : அமைச்சர் புதுவிளக்கம்!