IND vs AFG: சூர்யகுமார் யாதவ் அதிரடியால் இந்தியா அபார வெற்றி!
2IND vs AFG: 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் 8 அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறின.
லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த ஜூன் 17 அன்று நிறைவடைந்த நிலையில், சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் ஜூன் 19 துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘சூப்பர் 8’ சுற்றில் ‘குரூப் 1’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து, இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்த ஜோடி துவக்கத்தில் தடுமாற்றத்தை சந்தித்த நிலையில், ரோகித் சர்மா 8 (13) ரன்களுக்கும், விராட் கோலி 24 (24) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பின் வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக 11 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து, ரஷீத் கானிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 10 (7) ரன்களுக்கு வெளியேற, 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா, அந்த விக்கெட்டிற்கு 60 ரன்கள் சேர்த்து அசத்தினர். சூர்யகுமார் யாதவ் 53 (28) ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியாவும் 32 (24) வெளியேறினார்.
இறுதியில், இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் சேர்த்திருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு ரஷீத் கான் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூகி தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
பின் 182 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தானின் துவக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் ஹஸ்றதுல்லா சசாய், துவக்கத்திலேயே பும்ராவிடம் தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். இதன் காரணமாக, பவர்-பிளேவுக்குள்ளேயே ஆப்கான் அணி 3 விக்கெட்களை இழந்தது.
பின் குல்புதின் நைப் (17 ரன்கள்) மற்றும் அஸ்மதுல்லா ஒமர்சாய் (26 ரன்கள்) 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து, அணியை சிறிது நேரத்திற்கு விக்கெட் வீழ்ச்சியில் இருந்து மீட்டனர்.
இவர்கள் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய நஜிபுல்லா சத்ரான் 19 ரன்களுக்கும், முகமது நபி 14 ரன்களுக்கும் வெளியேறினர்.
பின் விக்கெட்களை தொடர்ந்து சரிய, 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்களையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி 134 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்தது. இதன்மூலம், 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, வெற்றியுடன் ‘சூப்பர் 8’ சுற்று பயணத்தை துவங்கியுள்ளது.
இந்தியாவுக்காக ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
இப்போட்டியில், அதிரடியாக விளையாடி 3 சிக்ஸ், 5 ஃபோர்களுடன் 28 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த சூர்யகுமார் யாதவ் ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
பியூட்டி டிப்ஸ்: தினமும் தலைக்குக் குளிப்பவரா நீங்கள்?
டாப் 10 நியூஸ் : கள்ளக்குறிச்சி வழக்கு விசாரணை முதல் காங்கிரஸ் போராட்டம் வரை!