வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி பார்படாஸில் உள்ள கென்சிங்டன் மைதானத்தில் நேற்று (ஜூலை 29) இரவு நடைபெற்றது.
இந்த போட்டியில் சீனியர் வீரர்களான ரோகித் மற்றும் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் களமிறங்கினர். ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் கூட முழுமையாக விளையாடாமல் 40.5 ஓவர்களில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீர்ர்களான இஷான் கிஷன் 55 ரன்னும், சுப்மன் கில் 34 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து 182 ரன்கள் என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிங் – மேயர்ஸ் தொடக்க ஜோடி களம் கண்டது.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மேயர்ஸ் தனக்கே உரிய அதிரடி பாணியை கையில் எடுத்து வெளுத்து கட்டினார்.
இதனால் 8.1 ஓவர்களிலே வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன்களை கடந்தது.
அதன்பின்னர் வந்த வீர்ர்களுடன் கேப்டன் ஷாய் ஹோப் அரைசதம் (63) அடிக்க, இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியா அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ஒருநாள் போட்டிகளுக்கு பின் முதல்முறையாக வெற்றிபெற்றுள்ளது.
அதே வேளையில் உலகக்கோப்பைத் தொடருக்கு கூட தகுதிபெறாத வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா தோல்வியடைந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் தொடர் 1-1 என்று சமநிலை பெற்றுள்ளதால் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற இருக்கும் 3வது மற்றும் கடைசி போட்டியை வென்று கோப்பையை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
7 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-56!
காட்டுத்தீ: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை!