ஐபிஎல் புதிய விதிகள்: வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை குழப்பம்!

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த 16வது ஐபில் தொடர் அகமதாபாத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கியது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னோடியாக ஒவ்வொரு ஆண்டும் சில புதிய விதிகள் ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்படும். இந்த விதிகள் சூடுபறக்கும் டி20 ஆட்டத்தில் கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தும்.

அந்தவகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இம்முறை 5 புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ‘இம்பேக்ட் பிளேயர்’, ‘பிளேயிங் 11 வீரர்கள் பட்டியல்’, ‘வைடு, நோபாலுக்கு மேல் முறையீடு’, ‘நகர்ந்தால் 5 ரன் போச்சு’ மற்றும் ‘நேரத்தை வீண் செய்தால் தண்டனை’ என்று 5 விதிகள் அறிமுகமாகியுள்ளன.

இதில் உள்ள ஒவ்வொரு விதிக்கும் சாதக, பாதக விஷயங்கள் உள்ளன. அதிலும் இம்பேக்ட் பிளேயர் விதியின் தாக்கம் ஐபிஎல் தொடர் தொடங்கிய இரண்டு நாட்களிலேயே தெரியவந்துள்ளது.

இம்பேக்ட் பிளேயர் விதி

இம்பேக்ட் பிளேயர் விதிப்படி டாஸ் வென்ற பின் வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன் மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். இதில் இருந்து ஒரு வீரரை ஆட்டத்தின் நடுவே பந்து வீச்சிலோ அல்லது பேட்டிங்கிலோ மாற்று வீரராக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வகையில் ஏற்கெனவே 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையின் கீழ் வெளிநாட்டு வீரரை களமிறக்க முடியாது. இதனால் இந்திய வீரரைத்தான் களமிறக்க முடியும். அதேவேளையில் களத்தில் 3 வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் புதிய விதிமுறையின்படி மற்றொரு வெளிநாட்டு வீரரை களமிறக்கலாம்.

இம்பேக்ட் பிளேயர் விதியை களநடுவரிடம் தகவல் தெரிவித்துவிட்டு விக்கெட் விழும்போதோ அல்லது பேட்ஸ்மேன் காயம் அடையும் போதோ பயன்படுத்தலாம். முக்கியமான இந்த விதியை 14வது ஓவருக்கு முன்பாக பயன்படுத்த வேண்டும்.

மாற்று வீரராக வெளியே செல்பவர் 4 ஓவர்களை வீசியிருந்தாலும் ‘இம்பேக்ட் பிளேயர்’ விதிமுறையின் கீழ் உள்ளே வரும் வீரர் முழுமையாக 4 ஓவர்கள் பந்து வீச முடியும், பேட்டிங் செய்ய முடியும். ஆனால் மாற்று வீரராக வெளியே செல்பவர் மீண்டும் அந்த போட்டியில் விளையாட முடியாது.

குறிப்பாக சென்னை அணியில் டெவோன் கான்வே விரைவாக ஆட்டமிழந்து விட்டால் அவருக்கு பதிலாக ‘இம்பேக்ட் பிளேயர்’ விதிமுறையின் கீழ் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே களமிறங்கினால், அவரால் பேட்டிங் செய்யவும் முடியும். பந்து வீசவும் முடியும்.

சென்னையை பழிவாங்கிய இம்பேக்ட் விதி!

கடந்த மார்ச் 31ம் தேதி நடந்த ஐபிஎல் துவக்கப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸை குஜராத் வென்ற நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.

குஜராத் அணி தரப்பில், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, அல்சாரி ஜோசப் மற்றும் ஜோசுவா லிட்டில் ஆகியோர் 5 விக்கெட்டுகள் எடுத்தனர்.

தொடர்ந்து பந்துவீச வந்த சென்னை அணி முதல்முறையாக இந்த தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதியை பயன்படுத்தியது. அதன்படி அம்பதி ராயுடுவுக்குப் பதிலாக மாற்று வீரராக இருந்த வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேயை களமிறக்கியது.

ஆனால் 3.2 ஓவர்கள் வீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்து 51 ரன்களை வாரி வழங்கினார் தேஷ்பாண்டே. இம்பேக்ட் பிளேயராக வந்து முதல் போட்டியிலேயே சிஎஸ்கேவின் தோல்வியில் இம்பேக்ட் செய்தார்.

அதேவேளையில், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இந்த இம்பேக்ட் பிளேயர் விதியைப் பயன்படுத்தியது. பீல்டிங்கின் போது காயம் அடைந்த கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக தமிழக வீரர் சாய் சுதர்ஷன் 2வது விக்கெட்டுக்கு களமிறக்கப்பட்டார். அவர் 3 பவுண்டரிகளுடன் 17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் சுதர்சனின் அதிரடி ஆட்டம் ஓரளவுக்கு கைகொடுத்தது.

ராஜபக்சேவுக்கு பதிலாக ரிஷி தவான்

தொடர்ந்து நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி (பிபிகேஎஸ்) இம்பேக்ட் பிளேயர் விதியை அற்புதமாகப் பயன்படுத்தியது. அதன்படி பேட்டிங்கின் போது அரைசதம் அடித்த பானுகா ராஜபக்சேவுக்கு பதிலாக இரண்டாவது இன்னிங்ஸில் ஆல்-ரவுண்டர் ரிஷி தவானை இம்பேக்ட் பிளேயராகக் கொண்டு வந்தது. இதன்மூலம் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து வெற்றியும் உறுதியானது.

கடைசி ஓவரில் வந்த இம்பேக்ட் பிளேயர்ஸ்

தொடர்ந்து நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆட்டத்தில் இரு அணிகளும் முதல் இன்னிங்ஸிலேயே இம்பேக்ட் பிளேயரைப் பயன்படுத்தின.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி கடைசி ஒரு பந்து மீதமிருக்கும் போது, அந்த ஓவரில் ஆட்டமிழந்த பதோனிக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக கிருஷ்ணப்பா கவுதமை களமிறக்கியது. வந்த வேகத்தில் ஒரு சிக்ஸ் அடித்து அணியின் ஸ்கோரை 193 ஆக உயர்த்தினார் கவுதம்.

அதேபோல முதல் இன்னிங்ஸில் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை எடுத்த கலீல் அகமதுவுக்கு பதிலாக அமன் கானை கடைசி ஓவரில் களமிறக்கியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

வரவேற்ற தோனி; புலம்பிய வார்னர்

இதனால் எதிர்பார்த்தபடியே இம்பேக்ட் பிளேயர் விதி நடப்பு ஐபிஎல் தொடரில் முக்கிய பங்கு வகிக்க தொடங்கியுள்ளது. ஆனால் எந்த சூழ்நிலையில் யாரை இம்பேக்ட் பிளேயராக களமிறக்க வேண்டும் என்பதில் அணி கேப்டன்கள் தெளிவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அது தோல்விக்கு வழிவகுத்துவிடும்.

இம்பேக்ட் பிளேயர் விதி குழப்பத்தை ஏற்படுத்துவதாக டெல்லி அணியின் கேப்டன் வார்னரும், இது கேப்டன்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது என்று நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இம்பேக்ட் விதியை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

கவாஸ்கர் நம்பிக்கை

இதற்கிடையே முன்னாள் இந்திய வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் இம்பேக்ட் பிளேயர் விதியை சிறப்பாக பயன்படுத்துவதற்கு சிறிது அவகாசம் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்தாண்டு அறிமுகப்படுத்தியுள்ள இம்பேக்ட் பிளேயர் விதியை புரிந்துகொள்வதற்கும், அதனை போட்டியில் சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கும் போட்டியில் பங்கேற்றுள்ள பத்து அணிகளுக்கும் சிறிது கால அவகாசம் தேவைப்படும். நடப்பு தொடரில் போக போக அதன் முக்கியத்துவம் புரியும். அப்போது ஆட்டத்திலும் அனல் பறக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது போலவே இம்பேக்ட் பிளேயர் விதி வரும் ஆட்டங்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் மிகப்பெரிய சக்தியாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருகிற ஆட்டங்களில் அனல் பறக்கும் என்பது உறுதி.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆன்லைன்‌ ரம்மி – பறிபோகும்‌ ஒவ்வொரு உயிருக்கும்‌ ஆளுநரே பொறுப்பு: செல்வப்பெருந்தகை

’விடுதலை’கதைத் திருட்டு: எழுத்தாளர் குற்றச்சாட்டு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *