அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று (செப்டம்பர் 10) நடந்த இறுதிச்சுற்று ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் மற்றும் துனிசியாவின் ஆன்ஸ் ஜபிர் ஆகியோர் மோதினர்.
நேர் செட் கணக்கில் வெற்றி!
நியூயார்க்கில் உள்ள ஆர்தர் ஆஷ் டென்னிஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆக்ரோசம் காட்டி இகா ஸ்வியாடெக் முதல் சுற்றை கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இகாவின் ஆட்டத்துக்கு இணையாக ஆன்ஸ் தனது வேகத்தை அதிகரித்து கடும் போட்டியளித்தார்.
எனினும் இந்த சுற்றிலும் மீண்டும் இகாவின் கையே ஓங்கியது. முடிவில் 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வென்று இகா ஸ்வியாடெக் கோப்பையை கைப்பற்றினார்.

ஒரே சீசனில் இரண்டு கிராண்ஸ்லாம்!
21 வயதான இகா, யு.எஸ் ஓபன் கோப்பையை கைப்பற்றிய முதல் போலந்து வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இந்த ஆண்டில் அவர் பெற்ற இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
முன்னதாக கடந்த மே மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபன் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் இகா.
இந்த இதன்மூலம் 2016 ஆம் ஆண்டு ஏஞ்சலிக் கெர்பருக்குப் பிறகு ஒரே சீசனில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடந்த லுகானே ஓபன் தொடரில் பங்கேற்ற இகா ஸ்வியாடெக் தனது 17 வயதில் முதன்முறையாக இறுதிச்சுற்றில் விளையாடி தோல்வி கண்டார். அப்போது டாப் 100 தரவரிசைக்கு வெளியே இருந்தார்.
எனினும் அந்த தோல்விக்கு பிறகு வீறுகொண்ட இகா, அடுத்த 3 ஆண்டுகளில் தொடர்ச்சியாக பங்கேற்ற 10 இறுதிப் போட்டிகளிலும் நேர் செட்களில் வென்று சாதனை படைத்துள்ளார்.

முதல் ஆப்பிரிக்க-அரேபிய வீராங்கனை!
அதேவேளையில், யு.எஸ் ஓபன் தொடரின் இறுதிச்சுற்றில் விளையாடிய முதல் ஆப்பிரிக்க-அரேபிய வீராங்கனை என்கிற பெருமையை பெற்றுள்ளார் ஆன்ஸ் ஜபிர். கடந்த ஜூலையில் நடைபெற்ற விம்பிள்டன் தொடரின் இறுதிச்சுற்றிலும் விளையாடியிருந்தார் ஆன்ஸ் ஜபிர்.
இதனைத்தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக் மற்றும் கடைசிவரை வெற்றிக்காக போராடிய ஆன்ஸ் ஜபிருக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கிறிஸ்டோபார் ஜெமா
’கிராண்ட்ஸ்லாம்’ அமெரிக்க ஓபன் டென்னிஸ் ; யார் யாருக்கு வெற்றி ?