“பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இறங்கி அடித்து பாருங்கள் என்று டி20 கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேனான சூர்ய குமார் யாதவுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சவால் விட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று (ஜூன் 9) இரவு 8 மணிக்கு நடக்கிறது.
குரூப் ஏ பிரிவில் இரு அணிகளும் இடம்பெற்றுள்ள நிலையில், முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி கெத்தாக இந்தியாவும், அமெரிக்காவிடம் தோல்வி கண்ட வெறியில் பாகிஸ்தானும் களமிறங்குகின்றன.
இதற்கிடையே வரலாற்றில் எப்போதும் ஆக்ரோசமாக பார்க்கப்படும் இந்த போட்டியை முன்னிட்டு இரு அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் கடும் சொற்களால் சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர்.
குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான கம்ரன் அக்மல் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
அவர், ”ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார். எனினும் அவரது அதிரடி ஆட்டம் பாகிஸ்தானுக்கு எதிரான 2 டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தற்போது அவரது ஃபார்ம் சிறப்பாக இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் கூட தன்னை நிரூபிக்க தவறினார்.
உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக ஏற்கெனவே ரோகித் சர்மாவும், விராட் கோலியும் நிரூபித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் சூர்ய குமார் யாதவ் தான் உலகின் நம்பர் 1 டி20 பேட்டர் தான் என்பதை நிரூபிக்கட்டும்” என்று அக்மல் சவால் விடுத்துள்ளார்.
அவரது சவால் தற்போது ரசிகர்களை எட்டியுள்ள நிலையில், சூர்ய குமார் யாதவ் இன்று பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்குவார் என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மோடியின் தேநீர் விருந்தில் முருகன்… மத்திய அமைச்சர்கள் யார், யார்?
மோடியின் செங்கோல் நாடகம் முடிவுக்கு வந்தது: ஜெய்ராம் ரமேஷ் தாக்கு!