ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 15) தொடங்கியது.
50 ஓவர் உலகக் கோப்பை இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.
போட்டியை நடத்தும் இந்தியாவுடன் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன.
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற மீதமிருக்கும் 2 அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பைனலுக்கு முன்னேறிய இலங்கை, நெதர்லாந்து அணிகளும் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முதல் போட்டி தொடங்கி, அதே மைதானத்தில் நவம்பர் 10 ஆம் தேதி உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியா பங்கேற்காத அனைத்து போட்டிகளுக்குமான டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 30 ஆம் தேதி கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் மைதானத்தில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னை, டெல்லி, புனே மைதானத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது.
செப்டம்பர் 1 ஆம் தேதி தர்மசாலா, லக்னோ, மும்பை மைதானம், செப்டம்பர் 2 ஆம் தேதி பெங்களூரு, கொல்கத்தா மைதானம், செப்டம்பர் 3 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இந்திய அணிவிளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது.
செப்டம்பர் 15 ஆம் தேதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்க உள்ள நிலையில் இன்று முதல் டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
போட்டிகளை காண்பதற்கு டிக்கெட் பெற விரும்புபவர்கள் https://www.cricketworldcup.com/register என்ற வலைப்பக்கத்தில் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
மோனிஷா
தமிழ்நாட்டிற்கு தண்ணீர்: பாஜக கோரிக்கையை நிராகரித்த கர்நாடக அரசு
சுதந்திர தினத்தில் பேச ஆரம்பித்த மேயர்… புறக்கணித்து வெளியேறிய திமுகவினர்!