AUS vs PAK: பெங்களுருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நேற்று (அக்டோபர் 21) நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 18வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஷதாப் கானுக்கு பதிலாக உஸாமா மிர் பாகிஸ்தானுக்காக களமிறங்கினார். ஆஸ்திரேலியா அதே அணியுடன் களமிறங்கியது.
பாகிஸ்தான் பவுலிங்கை சிதறடித்த தொடக்க ஜோடி!
பந்துவீச்சை தேர்வு செய்த பாகிஸ்தானுக்கு, துவக்கமே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஷ், ராக்கெட் வேகத்தில் ரன்களை குவிக்க துவங்கினர்.
10 ஓவர்களில் 82 ரன்கள், 20 ஓவர்களில் 149 ரன்கள், 30 ஓவர்களில் 208 ரன்கள் என, பாகிஸ்தான் பந்துவீச்சை தங்களது அதிரடியால் டேவிட் வார்னர் – மிட்சல் மார்ஷ் ஜோடி சிதறடித்தது. இவர்களின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பை உடைக்க, பாகிஸ்தான் அணிக்கு 34 ஓவர்கள் தேவைப்பட்டது. 9 சிக்ஸ், 10 பவுண்டரிகளுடன் 108 பந்துகளில் 121 ரன்கள் சேர்த்து, மிட்சல் மார்ஷ் வெளியேறினார்.
ஆனால், அதன்பின்னும் தனது அதிரடியை தொடர்ந்த டேவிட் வார்னர், 9 சிக்ஸ், 14 பவுண்டரிகளுடன் 124 பந்துகளில் 163 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் 400 ரன்களை எளிதாக கடக்கக்கூடிய நிலையில் இருந்தது ஆஸ்திரேலிய அணி. ஆனால், இவர்களுக்கு பிறகு களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்களை பறிகொடுக்க, ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
போராடி வீழ்ந்த பாகிஸ்தான்..
368 ரன்கள் என்ற பிரம்மாணட இலக்கை நோக்கிய விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு, துவக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷஃபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் தேவையான துவக்கத்தை அளித்தனர். அப்துல்லா ஷஃபீக் 64 ரன்களுக்கும், இமாம்-உல்-ஹக் 70 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பாபர் அசாம் 18 ரன்களுக்கு வெளியேறி மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.
அதன்பின், 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகீல் பொறுப்பாக விளையாடி பாகிஸ்தானுக்கு ரன்களை சேர்க்க துவங்கினர். ஆனால், ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு எதிராக அவர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ரிஸ்வான் 46 ரன்களுக்கும், ஷகீல் 30 ரன்களுக்கும் வெளியேறினர்.
பிறகு களம்கண்ட இஃப்திகார் அகமது 26 ரன்கள் சேர்க்க, மற்ற அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து வெளியேறினர். 46வது ஓவரிலேயே ஆல்-அவுட் ஆன பாகிஸ்தான் அணியால், 305 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதன்மூலம், இந்த உலகக்கோப்பை தொடரில், 62 ரன்கள் வித்தியாசத்தில் தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ள ஆஸ்திரேலிய அணி, புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தனது அதிரடியான துவக்கத்தால் 124 பந்துகளில் 163 ரன்கள் சேர்த்த டேவிட் வார்னர், இந்த போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இல்லை: ஜெய் ஷா விளக்கம்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!