சமீபத்தில் நடிந்து முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பைத் தொடர்ந்து 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு நடைபெற உள்ளது. இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது.
அதன்பின்னர் 4 வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவிருக்கின்றன.
போட்டியை இந்தியா நடத்தவிருப்பதால் இந்திய அணி நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. அதே போன்று ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன.
மீதமிருக்கும் 2 அணிகளுக்கான ஐசிசி உலக்கோப்பை தகுதி சுற்றுப் போட்டி ஜிம்பாப்வேவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
வரும் ஜூன் 29 ஆம் தேதி தொடங்கும் சூப்பர் 6 போட்டியில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
உலகக் கோப்பை சுற்றுப்பயணம்
இதனிடையே தொடரை வரவேற்கும் விதமாக, உலகக்கோப்பை சுற்றுப்பயணம் இன்று இந்தியாவின் அகமதாபாத் மைதானத்தில் இருந்து தொடங்கியுள்ளது.
மேலும் உலகக் கோப்பையானது பஹ்ரைன், மலேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 18 நாடுகள் மற்றும் 40 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப உள்ளது.
முன்னதாக இந்த தொடரின் சிறப்பம்சமாக வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் உலகக்கோப்பை பூமியில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 65 டிகிரி செல்ஷியஸில் பெஸ்போக் ஸ்ட்ராடோஸ்பெரிக் பலூன் உதவியுடன் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.
உலகக் கோப்பை அட்டவணை
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ஐசிசி சி.இ.ஓ. ஜெஃப் அல்லார்டிஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக், முத்தையா முரளிதரன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து அட்டவணையை வெளியிட்டனர்.
அதன்படி அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத் மாவட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முதல் போட்டி தொடங்கி, அதே மைதானத்தில் நவம்பர் 19 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
இந்தியாவில் உள்ள 10 மைதானங்களில் 46 நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் அகமதாபாத், சென்னை, தர்மசலா, டெல்லி, லக்னோ, புனே, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானங்களில் தலா 5 போட்டிகளும், ஹைதராபாத்தில் 3 போட்டிகளும் என மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்திய அணி
இந்திய அணி தனது முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் வைத்து ஆஸ்திரேலியா அணியை சந்திக்கிறது. சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எளிதாக தோற்கடித்தது ஆஸ்திரேலியா அணி.
இதற்கு பதிலடியாக இந்தியா தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பழித்தீர்க்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியாவும் 8 போட்டிகளிலும், இந்தியா 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
அக்டோபர் 11 அன்று ஆப்கானிஸ்தான் உடன் விளையாட உள்ளது. இதுவரை உலகக் கோப்பை தொடரில் ஒருமுறை மட்டுமே இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 15 அன்று இந்தியா தனது பரம வைரியான பாகிஸ்தானை அணியுடன் விளையாட உள்ளது. இதுவரை இரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி தனது ஆதிக்கத்தை காட்டியுள்ளது.
இந்நிலையில் வரும் உலகக்கோப்பையிலும் சொந்த மண்ணில் தனது ஆதிக்கத்தை இந்திய அணி தொடருமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அக்டோபர் 19 ஆம் தேதி பங்களாதேஷ் உடன் மோத உள்ளது. இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் 3 போட்டியில் இந்தியாவும், 1 போட்டியில் பங்களாதேஷும் வெற்றி பெற்றுள்ளது.
அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. நியூசிலாந்தும் இந்தியாவும் 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், 5 முறை நியூசிலாந்தும் 3 முறை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி நடைபெறவில்லை.
அக்டோபர் 29 ஆம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா. முன்னதாக இரு அணிகளும் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 4 முறை இங்கிலாந்தும் 3 முறை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது.
நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் குவாலிஃபயர் 2 அணியுடனும், நவம்பர் 11 ஆம் தேதி குவாலிஃபயர் 1 அணியுடனும் இந்தியா மோத உள்ளது.
நவம்பர் 5 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இரு அணிகளும் 5 முறை நேருக்கு மோதியுள்ள நிலையில் 3 முறை தென்னாப்பிரிக்காவும், 2 முறை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.
சென்னையில் போட்டி மாற்றம்
சில மாதங்களுக்கு முன்னர் வெளியான பட்டியலில் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிகள் சென்னை மற்றும் பெங்களூரு மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் தமிழகத்தில் நவம்பர் மாதம் பருவமழை காலம் என்பதால் மும்பை மற்றும் கொல்கத்தா மைதானத்தில் அரையிறுதி போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் கடைசியாக அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் பாகிஸ்தானும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதுகின்றன.
3வது முறை கோப்பையை கைப்பற்றுமா இந்தியா
ஐசிசி உலகக் கோப்பையை பொறுத்தவரை இந்தியா இதுவரை 3 முறை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதில் 1983 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்திலும், 2011 ஆம் ஆண்டு இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி வாகை சூடி கோப்பையைக் கைப்பற்றியது.
2003 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இந்த நிலையில் சொந்த மண்ணில் இந்தாண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பையில் 3வது முறையாக இந்தியா கோப்பையை வெல்லுமா என்று பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
மோனிஷா
#26 Years : சூர்யவம்சம் – சோர்வைப் போக்கும் உற்சாக டானிக்!
காங்கிரஸ் தலைவர் பதவி… யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி