2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நேற்று (அக்டோபர் 12) நடைபெற்ற 10வது லீக் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.
இந்த உலகக்கோப்பைக்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிகளில், 111 ரன்கள், 164 ரன்கள் மற்றும் 122 ரன்கள் என அடுத்தடுத்து இமாலய வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி, அதே ஆதிக்கத்துடனேயே இந்த போட்டியை துவங்கியது.
லக்னோ ஏக்நா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
குவின்டன் டி காக் அதிரடி
இதை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு துவக்க அட்டாக்காரர்களாக களமிறங்கிய குவின்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா, அந்த அணிக்கு சிறப்பான துவக்கம் கொடுத்தனர். பவுமா 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த வேன் டர் டூஷன் (26 ரன்கள்), ஏய்டன் மார்க்ரம் (56 ரன்கள்), கிளாஸன் (29 ரன்கள்), டேவிட் மில்லர் (17 ரன்கள்), மார்கோ ஜென்சன் (26 ரன்கள்) என தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மறுமுனையில் அதிரடி காட்டிய டி காக், 5 சிக்ஸ், 8 பவுண்டரியுடன் 106 பந்துகளில் 109 ரன்கள் விளாசினார். இதன் காரணமாக, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 311 ரன்கள் சேர்த்தது. ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.
வேகப் பந்துவீச்சில் மிரட்டிய தென் ஆப்பிரிக்கா
312 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்க அணியின் நெகிடி – ரபாடா – ஜென்சன் வேகப்பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல், 70 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து திணறியது. வார்னர், மார்ஷ், ஸ்மித், இங்கிலீஸ், மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டோய்னிஸ் என அனைத்து நட்சத்திர வீரர்களும் சொற்ப ரங்களுக்கு ஃபெவிலியன் திரும்பினர்.
இதன்பின், மார்னஸ் லபுசானே (46 ரன்கள்), மிட்செல் ஸ்டார்க் (27 ரன்கள்), பேட் கம்மின்ஸ் (22 ரன்கள்) ஆகியோர் சற்று பொறுப்பாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்தபோதும், அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. இறுதியில், 41வது ஓவரிலேயே 177 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல்-அவுட் ஆனது. ககிஸோ ரபாடா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதன்மூலம், 134 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு இமாலய வெற்றியை தென் ஆப்பிரிக்கா அணி இந்த உலகக்கோப்பையில் பதிவு செய்து, 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும், உலகக்கோப்பை வரலாற்றில், ரன்கள் அடிப்படையில் மிக மோசமான தோல்வியை ஆஸ்திரேலியா அணி பெற்றுள்ளது. விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள ஆஸ்திரேலியா, தற்போது புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
தனது அபாரமான சதத்திற்காக, குவின்டன் டி காக் இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
திருப்பதி பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இருந்து இன்று முதல் சிறப்புப் பேருந்துகள்!
மதுரை – சிங்கப்பூர்: தினசரி விமான சேவை எப்போது?