இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (நவம்பர் 19) நடைபெற உள்ளது. ICC world cup final India vs Australia
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் தற்போது அதன் கிளைமேக்ஸை எட்டியுள்ளது. மொத்தம் 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள் என 47 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
இந்த தொடரில் களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் எந்த அணியாலும் வீழ்த்த முடியாத அபார பலத்துடன் திகழ்ந்து வந்தது இந்திய அணி. அரையிறுதிப் போட்டியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து விளையாடிய நியூசிலாந்து அணியை தொடரை விட்டு விரட்டி அடித்து இறுதிப்போட்டியில் கால்பதித்தது.
இறுதிப் போட்டியில் கால்பதித்த மற்றொரு அணியான ஆஸ்திரேலியா லீக் போட்டிகளில் அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக புள்ளிப்பட்டியலிலும் ஒரு கட்டத்தில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால் விவேகத்துடன் செயல்பட்டு அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
பிளேயிங் 11
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.
இந்திய அணி
இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோகித் ஷர்மா இந்த தொடரில் மொத்தம் 62 பவுண்டரி, 28 சிக்சருடன் 550 ரன் எடுத்துள்ளார். விராட் கோலி 3 சதம், 5 அரைசதம் உட்பட 711 ரன்களை குவித்துள்ளார். மேலும் ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் (49 சதம்) சாதனையையும் விராட் கோலி (50) முறியடித்தார்.
ஸ்ரேயஸ் ஐயர் 526 ரன்களும், கே.எல்.ராகுல் 386 ரன்களும், சுப்மன் கில் 350 ரன்களும் எடுத்திருந்தனர். பந்து வீச்சில் முகமது ஷமி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியில் விளையாடும் பேட்ஸ்மேன்களை திணறிடித்து வருகிறார். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி நிச்சயம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்.
பும்ரா 18 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 13 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 16 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
மேலும் சொந்த மண்ணில் இறுதிப்போட்டியில் களமிறங்குவது இந்திய அணிக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும். காரணம் லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள் மத்தியில் விளையாடும் போது, வீரர்களுக்கு ஒரு பாசிடிவ் எனர்ஜி நிச்சயம் இருக்கும்.
கடந்த ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும், 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையிலும் இந்திய அணி இதே ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. அதற்கு எல்லாம் பதிலடி கொடுக்குமா இந்திய அணி என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா அணி
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு லீக் போட்டிகளில் இந்தியா, தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது. அதன் பின் வேகமெடுத்த ஆஸ்திரேலியா தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் வென்று 8வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
ஏற்கனவே 5 முறை கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ் 528 ரன்களும், மிட்செல் மார்ஷ் 426 ரன்களும் எடுத்துள்ளனர். மேலும் தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள டிராவிஸ் ஹெட் அணியில் இணைந்திருப்பதால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை வலுவாகவே உள்ளது.
குறிப்பாக ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தசைப்பிடிப்போடு விளையாடி இரட்டை சதம் விளாசி வரலாறு படைத்ததை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 22 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 14 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 13 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலிய வீரர்கள் குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் அதை வைத்து கடைசி பந்துவரை நம்பிக்கை இழக்காமல் போராடுவார்கள் என்பது இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் கடும் சவாலாக இருக்கும் என்பது உறுதி. எனவே இன்றைய இறுதிப் போட்டி நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
இருப்பினும் 3வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலும் இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ICC world cup final India vs Australia
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மீண்டும் ஆட்குறைப்பில் இறங்கியுள்ள அமேசான்!
நாளை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு!