இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டுள்ளது.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை வெளியிடுவதற்காக மும்பையில் இன்று (ஜூன் 27) நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ஐசிசி சி.இ.ஓ. ஜெஃப் அல்லார்டிஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக், முத்தையா முரளிதரன் ஆகியோர் அட்டவணையை வெளியிட்டனர்.
அதன்படி அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் முதல் போட்டி தொடங்கி, அதே அகமதாபாத் மைதானத்தில் நவம்பர் 19 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது.
உலகக் கோப்பை தொடர் அகமதாபாத், ஹைதராபாத், தர்மசாலா, டெல்லி, சென்னை, லக்னோ, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, புனே ஆகிய 10 மைதானங்களில் நடைபெற உள்ளது.
சென்னையில் மட்டும் 5 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது.
தொடர்ந்து அக்டோபர் 11 அன்று ஆப்கானிஸ்தான், 15 ஆம் தேதி பாகிஸ்தான், 19 ஆம் தேதி பங்களாதேஷ், 22 ஆம் தேதி நியூசிலாந்து, 29 ஆம் தேதி இங்கிலாந்து,
நவம்பர் 2 ஆம் தேதி குவாலிஃபயர் 2, 5 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா, 11 ஆம் தேதி குவாலிஃபயர் 1 ஆகிய 9 அணிகளுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்த உள்ளது.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்கு (46 நாட்கள்) நடைபெறும் இந்த தொடரை இந்தியா நடத்துவதால் இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
மீதமிருக்கும் 2 அணிகளுக்கான தகுதி சுற்று ஜிம்பாபேவில் நடைபெற்று வருகிறது.
மோனிஷா
செந்தில் பாலாஜி கைது: அமலாக்கத்துறையிடம் ஆதாரம் கேட்கும் என்.ஆர்.இளங்கோ