ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
8வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
4 லீக் போட்டிகளில் விளையாடிய இந்திய மகளிர் அணி இங்கிலாந்துடன் விளையாடிய 3வது லீக் போட்டியில் மட்டும் தோல்வியடைந்தது.
இதனால் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, நேற்று (பிப்ரவரி 23) இரவு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே இந்தியாவின் பந்துவீச்சை பறக்கவிட்டனர். 20 ஓவர் இறுதியில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணி தரப்பில் ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும் தீப்தி ஷர்மா மற்றும் ராதா யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்துகளைப் பறக்கவிட்டனர்.
இந்திய அணியில், அதிகபட்சமாக ஹர்மன் பீரித் கவுர் அரைசதம் அடித்து 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43, ரன்களும், தீப்தி ஷர்மா 20 ரன்களும், ரிச்சா கோஷ் 14 ரன்களும், சினே ராணா 11 ரன்களும் எடுத்திருந்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விட வேண்டும் என்று இறுதிவரை போராடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தி 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
இதனால் டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரை விட்டு இந்திய அணி வெளியேறியது.
ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், மற்றொரு அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோத உள்ளன.
மோனிஷா
கோடைக்காலத்தைச் சமாளிக்க காற்றாலை மின்சாரம்!
ரஷ்யா எண்ணெய் இறக்குமதி: முதலிடத்தில் இந்தியா!
Comments are closed.