தொடங்குகிறது மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் போட்டியில் இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான்
ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை போட்டி இன்று(பிப்ரவரி 10) தென் ஆப்பிரிக்காவில் இரவு 10.30மணிக்குத் தொடங்குகிறது.
ஐசிசி நடத்தும் மகளிருக்கான டி20 உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் நகரில் இன்று தொடங்கி பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு டி20 போட்டியில், 5முறை சாம்பியன் பட்டம் வென்ற பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய 10 அணிகள் மோதுகின்றன.
குரூப் 1-ல் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும், குரூப் 2-ல் இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி
குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள ஹர்மான் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுடன் மோதுகிறது. தொடர்ந்து 15-ம்தேதி மேற்கிந்தியத் தீவுகள், 18-ம் தேதி இங்கிலாந்து, 20-ம் தேதி அயர்லாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜி ஷிகாயக் பன் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
U-19 அணி தொடக்கப் பதிப்பின் கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணிக்குக் கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. இந்திய அணியை ஹர்மன்பிரீத கவுர் வழிநடத்துகிறார்.
இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களான தீப்தி ஷர்மா, ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் போன்றவர்களோடு வேகப்பந்து வீச்சாளர்களின் நல்ல கலவையைக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா-இலங்கை மோதல்
இன்று இரவு தொடங்கவுள்ள முதல் லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
தென்னாப்பிரிக்கா அணிக்கு சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெறவுள்ளதால் கூடுதல் நன்மைகள் அமையும். தென்னாப்பிரிக்கா அணி 2020 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் ஆஸ்திரேலியாவிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
வழக்கமான கேப்டன் டேன் வான் நீகெர்க் உடற்தகுதி பெறாததால், அவரின் உதவி இல்லாமல் தென்னாப்பிரிக்க அணி களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் முக்கியமான நேரங்களில் ஆட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல அனுபவமிக்க வீராங்கனைகளை அந்த அணி கொண்டுள்ளது.
சாமரி அதபத்து தலைமையிலான இலங்கை அணி ஐசிசி மகளிர் டி20 தரவரிசையில் 9வது இடத்தில் இருக்கின்றது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் போட்டியில் வெற்றி பெற அனைத்துப் பயிற்சிகளுடனும் இலங்கை அணி தங்களது வீரர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
மோனிஷா
தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி!
1600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த யாஹூ நிறுவனம்!