மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் தொடரில் இலங்கை அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது நியூசிலாந்து.
8வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
அரையிறுதிக்குள் நுழைவதற்காக தொடரில் இடம்பெற்றுள்ள 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து லீக் சுற்றில் விளையாடி வருகின்றன.
நேற்று (பிப்ரவரி 19) இரவு குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களே போட்டியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பெர்னாடின் பெசுய்டன்ஹவுட் 32 ரன்களும் பேட்ஸ் 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய அமெலியா கெர் அணியில் அதிகபட்சமாக அரைசதம் அடித்து 48 பந்துகளில் 66 ரன் எடுத்து ரன் அவுட்டானார்.
20 ஓவர் இறுதியில் நியூசிலாந்து அணி வெறும் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்திருந்தது.
இதனால் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி நியூசிலாந்தின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 15.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 60 ரன்களில் வெளியேறியது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக சாமரி அதபத்து 19 ரன்களும் மல்ஷா ஷெஹானி 10 ரன்களும் எடுத்திருந்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெற்றி பெற்றது.
இலங்கை அணி நியூசிலாந்திடம் மோசமாகத் தோற்றதால் டி20 உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேறியது.
நேற்று குரூப் பி பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியும் உலக் கோப்பை தொடரை விட்டு வெளியேறியது.
இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவிருக்கின்றன. புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில் இருப்பதால் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும்.
மோனிஷா
ஆறு சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை: காரணம் என்ன?
போதையில் வாகனம் ஓட்டினால் சொத்துகள் பறிமுதல்: போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!