ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
8வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
குரூப் ஏ பிரிவில் 8 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மற்றும் 4 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
குரூப் பி பிரிவில் 8 புள்ளிகளுடன் இங்கிலாந்து மற்றும் 6 புள்ளிகளுடன் இந்தியா அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
இதில் நேற்று (பிப்ரவரி 21) இரவு 10.30 மணிக்குத் தென்னாப்பிரிக்கா – பங்களாதேஷ் அணிகள் மோதின. ஒரு லீக் போட்டியில் கூட வெற்றி பெறாத பங்களாதேஷ் அணி நேற்றைய கடைசி லீக் போட்டியில் வென்று ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம் என்று வாழ்வா சாவா போராட்டத்தில் களமிறங்கியது.
டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்க் செய்த பங்களாதேஷ் அணி 20 ஓவர் இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு வெறும் 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதனால் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் ஓப்பனர்களே ஆட்டத்தை முடித்து அதிரடி காட்டினர்.
தென்னாப்பிரிக்கா அணியில் லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் இணை 17.5 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று அதிரடியாக அரையிறுதிக்குள் நுழைந்தது தென்னாப்பிரிக்கா அணி.
நாளை (பிப்ரவரி 23) முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதவிருக்கின்றன.
மோனிஷா
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி!
கிச்சன் கீர்த்தனா: காடை பார்பிக்யு!