ICC Rankings : முதன்முறையாக ’முதலிடம்’ பிடித்த இந்திய பவுலர்!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் ஜெய்ஸ்வாலின் இரட்டை சதத்துடன், 9 விக்கெட்டுகளை வேட்டையாடி ஆட்டநாயகன் விருது பெற்ற இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பங்கு மிக முக்கியமானது.
முதலிடத்தில் பும்ரா
இந்த நிலையில் ஐசிசி இன்று (பிப்ரவரி 7) வெளியிட்டுள்ள ஆடவர் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 881 புள்ளிகளுடன் பும்ரா முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதன்மூலம் ஆண்கள் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பும்ரா.
மேலும் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் பிஷன் பேடி ஆகியோருக்கு பிறகு முதலிடத்தைப் பிடித்த இந்தியாவின் நான்காவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
அதேவேளையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து 11 மாதங்களாக முதலிடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஷ்வின் 841 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஜெய்ஸ்வால் முன்னேற்றம்!
பும்ரா மட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் இரட்டை சதத்தை (209 ரன்கள்) பதிவு செய்த சக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஐசிசி தரவரிசையில் வெகுவாக முன்னேறியுள்ளார்.
ஐசிசி ஆண்கள் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஜெய்ஸ்வால் 37 இடங்கள் முன்னேறி 29வது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் 864 புள்ளிகளுடன் நியூசிலாந்தின் மூத்த வீரர் கேன் வில்லியம்சன் உள்ளார்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா(1), அஸ்வின் (2) மற்றும் அக்சர் படேல்(5) டாப் 5 இடத்திற்குள் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Rose day: காதலி மனதில் இடம்பிடிக்க எந்த நிற ரோஜா கொடுக்கலாம்?
பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யார் யார்?