ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 3 வீரர்களில் 2 இந்திய வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.
ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்தின் டேவான் கான்வே, இந்தியாவின் சுப்மன் கில், மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் டேவான்.
இந்திய அணிக்கு எதிராகவும் சிறப்பாக ஆடினார். இவர் கடந்த ஜனவரி மாதத்தில் 3 சதம் மற்றும் 2 அரை சதம் அடித்துள்ளார்.
அதன் மூலம் அவர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சுப்மன் கில்லுக்கு கடந்த மாதம் மிகச்சிறப்பாக அமைந்தது.
அவர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமும், டி20 தொடரில் சதமும் அடித்து இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
23 வயதான சுப்மன் கில் கடந்த மாதம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்ததோடு மட்டுமின்றி இந்த பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா இல்லாத காரணத்தினால் இந்திய அணியின் பந்துவீச்சின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ளார் மொகமது சிராஜ்.
நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அபார பந்து வீச்சை வெளிப்படுத்திய இவர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, போப்பே லிட்ச்பீல்ட் மற்றும் இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண்: நீதிமன்றத்தில் ஆஜர்!
விஜய்யின் லியோ படத்தில் இருந்து த்ரிஷா விலகுகிறாரா?