நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி: முதல் இடத்தில் தொடரும் ஆதிக்கம்!
உலக கோப்பை ஒரு நாள் போட்டியில் விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் நியூசிலாந்து அணி, தனது 3வது போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. இதுவரை, ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில், இந்த 2 அணிகள் மோதிக்கொண்ட 5 போட்டிகளிலுமே, நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த ஆதிக்கத்தை தொடருமா? இல்லை வங்கதேசம் பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த போட்டி துவங்கியது.
காயம் காரணமாக, சுமார் 7 மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த நியூசிலாந்தின் கேப்டன் கென் வில்லியம்சன், இந்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பினார். முதலில் டாஸ் வென்ற இவர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சகிப் அல் ஹசன் – முஷ்ஃபிகூர் ரஹீம் போராட்டம்
போட்டியின் முதல் பந்திலேயே லிட்டன் தாஸின் விக்கெட்டை கைப்பற்றி, தனது ஸ்டைலில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவக்கிவைத்தார், ட்ரெண்ட் போல்ட். அதற்கு பின் களமிறங்கிய, தன்சித் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், ஷண்டோ ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேச அணி 56 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது.
அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் சகிப் அல் ஹசன் மற்றும் முஷ்ஃபிகூர் ரஹீம், 5வது விக்கெட்டிற்கு 96 ரன்கள் சேர்த்து, அணியை விக்கெட் வீழ்ச்சியில் இருந்து மீட்டனர். சகிப் அல் ஹசன் 40 ரன்களுக்கும் முஷ்ஃபிகூர் ரஹீம் 66 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய முகமதுல்லா (40 ரன்கள்) தவிர அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வங்கதேசம் 245 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. நியூசிலாந்து அணிக்காக, லாக்கி பெர்குசன் 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
டெரில் மிட்சல் அதிரடி
246 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்துக்கு, ரச்சின் ரவீந்திரா 9 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றம் அளித்தலும், மறுமுனையில் தேவன் கான்வே வழக்கம்போல தனது சிறப்பான ஆட்டத்தால் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் & டெரில் மிட்சல், ஒருமுனையில் நிதானம், மறுமுனையில் அதிரடி என ரன்களை குவித்தனர். வில்லியம்சன் பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்க்க, டெரில் மிட்சல் பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டார்.
கேன் வில்லியம்சன் 78 ரன்களில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பந்து கையில் பட்டு ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் இப்போட்டியில் இருந்து ஒய்வு பெற்றார்.
மறுபுறத்தில், டெரில் மிட்சலின் அதிரடி தொடர, 43வது ஓவரிலேயே இலக்கை எட்டிய நியூசிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 4 சிக்ஸ், 6 பவுண்டரி என, டெரில் மிட்சல் 67 பந்துகளில் 89 ரன்கள் குவித்திருந்தார்.
இந்த வெற்றியின் மூலம், விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, 6 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. மேலும், ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில், வங்கதேச அணிக்கு எதிராக ஒருமுறை கூட தோல்வியை சந்திக்காமல், 6வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
இந்த போட்டியில், தனது சிறப்பான பந்துவீச்சுக்காக நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் ‘ஆட்ட நாயகன்’ விருது வென்றார்.
முரளி
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: பாம்பே கார டோஸ்ட்