உலகக்கோப்பை டி20 தொடர் இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.இந்த தொடருக்கென்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த தொடரில் நடப்பு டி 20 உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியும், உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட உலகின் டாப் 16 அணிகள் இந்த தொடரில் கலந்து கொண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கு பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த உலகக் கோப்பை துவங்க இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் கோப்பையை வெல்லப்போவது யார்? அதில் எந்த வீரரின் பங்கு சிறப்பானதாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த தொடரை நடத்தும் ஐசிசி… இத்தொடரில் கலக்கப்போகும் உலகின் டாப் 5 வீரர்களை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது.
டேவிட் வார்னர்: ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரரான இவர் கடந்த முறை துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் 3 அரை சதங்கள் உட்பட 289 ரன்களை விளாசி தொடர் நாயகன் விருதை வென்று முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தவர்.
அந்த தொடருக்குப் பின்பும் சமீபத்திய ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடி நல்ல பார்மில் இருக்கும் அவர் இம்முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் மீண்டும் அபாரமாக செயல்பட்டு கோப்பையை தக்க வைக்க உதவுவார் என்று ஐசிசி கூறியுள்ளது.
வணிந்து ஹஸரங்கா: இலங்கை அணியில் சுழல் பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்தும் இவர் துபாயில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் (16) எடுத்த பவுலராக சாதனை படைத்தார்.
அந்த பார்மை அப்படியே தொடரும் அவர் சமீபத்திய ஆசிய கோப்பையில் அற்புதமாக செயல்பட்டு இலங்கை 6வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். அதேபோல ஆஸ்திரேலியாவிலும் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பவுலர்களின் பட்டியலில் இவரும் ஒருவராக இருப்பார் என்று ஐசிசி பாராட்டியுள்ளது.
ஜோஸ் பட்லர்: 2010 க்குப்பின் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் இங்கிலாந்தை தற்போது பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கும் இவர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் கேப்டனாக தலைமை தாங்குகிறார்.
கடந்த வருடம் துபாயில் நடந்த உலகக் கோப்பையில் சதமடித்த ஒரே பேட்ஸ்மேனாக (101* இலங்கைக்கு எதிராக) சாதனை படைத்த இவர் 2022 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 863 ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்றதாக ஐசிசி பாராட்டியுள்ளது. அதேபோல் இம்முறை இங்கிலாந்துக்காக கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அசத்துவார் என்று ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சூர்யகுமார் யாதவ்: 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரையும் மிஞ்சும் வகையில் டி20 கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே மைதானத்தின் நாலாபுறமும் சுழன்றடித்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள இவர் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக ஜொலிப்பதாக ஐசிசி பாராட்டியுள்ளது.
அதனால் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா உலக கோப்பையை வெல்வதற்கு இவரது பங்கு முக்கியமாக இருக்கும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
முஹம்மது ரிஸ்வான்: பாபர் அசாமை மிஞ்சும் அளவுக்கு அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ள பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான், தொடர்ச்சியாக ரன்களை குவிப்பதில் சிறந்தவர் என ஐசிசி தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த உலக கோப்பையில் 281 ரன்களை விளாசிய அவர் சமீபத்திய ஆசிய கோப்பை மற்றும் இங்கிலாந்து தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நல்ல பார்மில் இருப்பதால் உலக கோப்பையிலும் பாகிஸ்தானின் வெற்றிகளுக்கு பங்காற்றுவார் என்று ஐசிசி கூறியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்