இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் தாமதமாகப் பந்து வீசியதாக இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதன் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜுவ் காந்தி மைதானத்தில் கடந்த 18ம் தேதி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீரர்கள் அனைவரும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
அன்றைய ஆட்டத்தில் சுப்மன் கில்லின் அதிரடி தான் முதல் ஒருநாள் போட்டி இந்தியா வசமாக, பெரிய பலமாக அமைந்தது.
மேலும் நியூசிலாந்து அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், ஐசிசியின் ஆட்ட நேர நடுவர் ஜவகல் ஸ்ரீநாத், இந்திய அணி 50 ஓவர்களை வீசுவதற்காகக் கொடுக்கப்பட்ட நேரத்தில் 47 ஓவர்களை மட்டுமே வீசியுள்ளனர்.
இலக்கை விட மூன்று ஓவர்கள் குறைவாக இந்திய அணி வீசியுள்ளது என்று குற்றஞ்சாட்டினார்.
கள நடுவர்களான அனில் சவுத்ரி மற்றும் நிதின் மேனன், மூன்றாவது நடுவர் கே.என். அனந்தபத்மநாபன் மற்றும் நான்காவது நடுவர் ஜெயராமன் மதனகோபால் ஆகியோரும் அதனை வழி மொழிந்தனர்.
இதனை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனால் இந்திய அணி தனது போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
50 ஓவர் கொண்ட ஒரு நாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸிற்கு 3.30 மணி நேரம் விளையாடுவதற்காக நிர்ணயிக்கப்படும். ஆனால் இந்திய அணி இந்த நேரத்தில் வெறும் 47 ஓவர் மட்டுமே பந்துகளை வீசியுள்ளது.
மோனிஷா
தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலை நடைபயணம் – எங்கே தொடங்குகிறார் தெரியுமா?
“வாங்க முடியாது வெளியே போங்க” – ஸ்ரீமதி தாயிடம் நீதிபதி கோபம்!