முதல் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
நாக்பூர் விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மூட்டு காயத்தினால் ஏற்பட்ட 6 மாத ஓய்வுக்கு பிறகு இந்த போட்டியில் களமிறங்கிய ஜடேஜா மொத்தம் 7 விக்கெட்டுகள் மற்றும் அரைசதம் (70) விளாசி கவனத்தை ஈர்த்தார். அவரே முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஜடேஜாவை பாராட்டி வரும் நிலையில், அவருக்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
முதல் இன்னிங்ஸ் விளையாடும்போது இந்திய வீரர் சிராஜ் கையில் இருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்து ஜடேஜா பந்தில் தடவியது போல வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை சுட்டிக் காட்டிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பந்தை ஜடேஜா சேதப்படுத்தியதாக கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
எனினும் ஜடேஜா கையில் தடவியது வலி நிவாரணி க்ரீம் தான் என்றும், அதனை அவர் தனது விரலில் தான் தடவினார் என்று தெரியவந்தது.
இந்நிலையில், நடுவர்களின் அனுமதியின்றி களத்தில் இருந்த ஜடேஜா, வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
ஐசிசி விதிமுறைகளின்படி லெவல் 1 விதிமீறலில் ஈடுபட்ட ஜடேஜாவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1 டிமெரிட் புள்ளியும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் இந்த நடவடிக்கைக்கு இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “வலி நிவாரணிக்கான க்ரீமை விரலில் பூசியதை வைத்து அவர் பந்தை சேதப்படுத்த முயற்சித்தார் என்று கூறுகிறார்கள். கள நடுவர்களுக்கும், ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் அதில் எந்த பிரச்சனையும் இல்லாத போது, ஏன் இதனை பெரிய விவாத பொருளாக எடுக்க வேண்டும்? என்று ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபோன்று ரசிகர்கள் பலரும் ஐசிசியின் முடிவுக்கு தங்களது எதிர்கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
விஜயகாந்தை சந்திக்காதது ஏன்? – வாகை சந்திரசேகர் உருக்கம்
முதல் டெஸ்ட் போட்டி : 3வது நாளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா