இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஐசிசி ஆட்ட விதிகளில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு மாதமாக கொண்டாடப்பட்டு வரும் டி20 உலகக்கோப்பை திருவிழா நாளை (நவம்பர் 13) நடக்க இருக்கும் பாகிஸ்தான் – இங்கிலாந்து இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற இருக்கிறது.
பயம் காட்டும் மழை!
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி) நடக்க இருக்கும் இந்த மாபெரும் யுத்தத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது மழை தான். அங்கு 80 சதவீதம் அளவிற்கு நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஐசிசியின் முதல் திட்டம்!
இதற்கு முன்கூட்டியே திட்டங்களை தீட்டி வைத்திருந்த ஐசிசி, ஒருவேளை போட்டியன்று மழை குறுக்கீடு செய்து ஆட்டம் தடைபட்டால், அதற்கு மறுநாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டு, ஆட்டம் கைவிடப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்றும் இடியுடன் கூடிய 80 சதவீத மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து திங்கள்கிழமையும் (நவம்பர் 14) மழை பெய்து ஆட்டம் கைவிடப்படும் பட்சத்தில், உலகக்கோப்பையானது இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று ஐசிசி முன்னதாக கூறியிருந்தது.
திட்டத்தை மாற்றிய ஐசிசி!
இந்நிலையில் இறுதிப்போட்டியில் எப்படியாவது முடிவு கிடைக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக உள்ள ஐசிசி, தற்போது ஒரு மிகப்பெரும் மாற்றத்தினை கொண்டுவந்துள்ளது.
அதன்படி, ரிசர்வ் நாளில் அதாவது திங்கள் கிழமையன்று விளையாடும் நேரத்தை இரண்டு மணிநேரத்தில் இருந்து நான்கு மணி நேரமாக அதிகரிக்க ஐசிசி முடிவு செய்துள்ளது.
லீக் சுற்றுகளில் மழை பெய்தால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி ஆட்டத்தின் முடிவை அறிவிப்பதற்கு 5 ஓவர்கள் வீசப்பட்டிருப்பது அவசியம். ஆனால், நாக் அவுட் போட்டிகளில் அவ்வாறு முடிவு அறிவிப்பதற்கு 10 ஓவர்கள் தேவைப்படுகிறது.
எனவே இறுதிப்போட்டியானது ரிசர்வ் நாளில் நடைபெறும் பட்சத்தில் ஐசிசி நிபந்தனைகள் (பிரிவு 13.7.3) படி, விளையாடும் நேரம் நான்கு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
அதேவேளையில் லேசான மழை என்றால், தேவையான ஓவர்களைக் குறைத்து, திட்டமிடப்பட்ட போட்டி நாளில் அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று போட்டியை முடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
மேலும் ரிசர்வ் நாளுக்கு ஆட்டம் மாற்றப்படுகிறது எனில், போட்டியானது, இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு, நிறுத்தப்பட்ட ஆட்டத்தின் தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
வீடியோ : உலகின் உயரமான வாக்குச்சாவடியில் நடந்த சாதனை!
சீர்காழியில் மேக வெடிப்பா? – வானிலை மையம் விளக்கம்!