கால்பந்து உலகில் நான்தான் பெஸ்ட் என்று கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ கூறியுள்ளார்.
போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் , ரியல் மாட்ரிட், யுவென்டஸ் போன்ற ஐரோப்பிய கிளப்களுக்கு விளையாடியுள்ளார். தற்போது, சவுதி அரேபியாவின் அல் நாஸர் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை, 923 கோல்களை ரொனால்டோ அடித்துள்ளார்.
இந்த நிலையில், தனது 40வது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெயின் டி.வி. நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘கால்பந்து உலகில் நான்தான் பெஸ்ட். சிலர் பீலே, மரடோனா, மெஸ்ஸி என்று நினைக்கலாம். உங்கள் எண்ணத்தை நான் மதிக்கிறேன். என்னை பொறுத்தவரை நான்தான் பெஸ்ட். விரைவில் ஆயிரம் கோல் அடிப்பேன். அப்படி , அடிக்கவில்லையென்றாலும் பிரச்னை இல்லை ‘என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலக்கட்டத்தில் ரொனால்டோவுடன் ஒப்பிடப்படும் மெஸ்ஸி, கால்பந்து உலகக் கோப்பையை வென்றிருக்கிறார். ஆனால், உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு ரொனால்டோவுக்கு கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன்? ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஒரு முறை கூட கால் இறுதியை தாண்டியதில்லை.
மெஸ்ஸி 8 முறை பல்லான் டி ஆர் விருதை பெற்றுள்ளார். ரொனால்டோ 5 முறையே கௌரவமிக்க இந்த விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1985 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி பிறந்த ரொனால்டோவுக்கு நாளை 40 வயது பிறக்கிறது. அடுத்த உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரொனால்டோவுக்கும் மெஸ்ஸிக்கும் கடைசி உலகக் கோப்பையாக அமையும்.