ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி இழந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளங்களின் மூலம் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணியின் தோல்விக்குப் பின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின், கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். ஆட்டத்தின் முதல் நாளிலேயே ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துவிட்டனர்.
அதனால் முதல் இன்னிங்ஸில் மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டது. ஆனால் இந்திய அணியால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை.
இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு சில நல்ல தருணங்கள் அமைந்தது. ஆனால் இந்திய அணியில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்காதது ஏன் என்பது தான் எனக்கு புரியவில்லை.
ஏற்கனவே சொல்லியது போல், திறமை வாய்ந்த ஸ்பின்னர்களுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்களால் காற்றையும், பவுன்ஸையும் பயன்படுத்தி பந்தில் மாயங்களை நிகழ்த்த முடியும்.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் டாப் 8 வரிசையில், 5 பேர் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதையும் மறக்க கூடாது, ”என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
தடம் புரளும் ரயில்களும், நெறி பிறழும் அரசியலும்