பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் கூடுதல் எடை காரணமாக இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் மனதளவில் உடைந்து போனதால், உடனடியாக தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்தார்.
தற்போது இந்தியாவுக்கு திரும்பியுள்ள நிலையில், அவர் தனது ஓய்வு குறித்து இன்னும் சரியான முடிவை சொல்ல தெரிவில்லை என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் விரைவில் மீண்டும் மல்யுத்தத்துக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகத் தகுதி பெற்று இருந்தார். மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.
ஆனால், போட்டி தினத்தன்று காலையில் அவரது உடல் எடை 50 கிலோவுக்கு மேலாக 100 கிராம் கூடுதலாக இருந்தது. இதையடுத்து ஒலிம்பிக் கமிட்டி அவரை தகுதி நீக்கம் செய்தது. சட்டரீதியான போராட்டத்திலும் போகத்துக்கு பலன் கிடைக்கவில்லை.
தற்போது, போகத்துக்கு 29 வயதாகும் நிலையில் அவரால் இன்னும் சில ஆண்டுகள் விளையாட முடியும் என்கிற நிலையில், தாய் நாடு திரும்பினார். அவருக்கு சக மல்யுத்த வீரர்கள் , மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனால் ஆனந்த கண்ணீரில் மிதந்தார் வினேஷ் போகத்.
அதன் பின் தனது எதிர்காலத் திட்டம் குறித்து பேசிய அவர், “ஒலிம்பிக் பதக்கம் கிடைக்காதது எனக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது. மனதில் ஏற்பட்ட காயம் ஆற சில காலம் ஆகும்.
மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். ஆனால், இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. நான் மல்யுத்தத்தில் இருந்து விடை பெறுவேனா அல்லது தொடர்வேனா? என்பது குறித்து என்னால் உறுதியாக எதுவும் சொல்ல முடியவில்லை. உண்மை வெல்ல வேண்டும் என நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஆவணி மாத நட்சத்திர பலன் – சதயம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
வசூலில் மிரட்டும் தங்கலான்… துரத்தும் டிமான்டி காலனி 2