ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்த சூர்யகுமார் யாதவின் ஷாட்களை இன்னும் நம்பமுடியவில்லை என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
வான்கடே மைதானத்தில் நேற்று (மே 12) இரவு நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
அடுத்த சுற்றுக்கு முன்னேற இது முக்கியமான போட்டி என்பதால் போட்டியின் ஒவ்வொரு ஓவரிலும் அனல் பறந்தது.
டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியான மோடுக்கு தன்னை மாற்றியது.
அதிலும் சூர்யகுமார் யாதவின் பலே ஆட்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
16வது ஓவரில் அரைசதம் கடந்த அவர் அதன்பிறகு சந்தித்த ஒவ்வொரு பந்துகளையும் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டினார்.
இதனால் முதல் 32 பந்துகளில் அரைசதம் அடித்த சூர்யகுமார், அடுத்த 17 பந்துகளில் விஸ்வரூபம் காட்டியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 103 (49) ரன்களுடன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதில் 11 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும்.
20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ். தொடர்ந்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் கடைசி கட்டத்தில் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் 32 பந்துகளில் 79 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார் என்றாலும் அது பலனளிக்கவில்லை.
இதனையடுத்து போட்டிக்கு பிறகு ரஷீத்கான் பேசுகையில்,
“வான்கடே பேட் செய்வதற்கு சிறந்த ஆடுகளம். இங்கே 200-க்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
ஆனால் சூர்யகுமார் யாதவின் ஆட்டம் நம்பமுடியாததாக இருந்தது. அவருக்கு பந்து வீசுவது கடினம். எப்படி பவுலிங் செய்தாலும் அதற்கு ஒரு ஷாட் வைத்துள்ளார்.
அவர் விளையாடிய சில ஷாட்கள் நம்பமுடியாததாக உள்ளது அதனால் தான் சூர்யகுமார் டி20 போட்டியில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் தனது 135வது ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு வான்கடே மைதானத்தில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
முன்னதாக சச்சின் கடந்த 2011 ஆம் ஆண்டு கொச்சி அணிக்கு எதிராக வான்கடேவில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு தொடரில் இதுவரை 12 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள சூர்யகுமார் யாதவ், 43.55 சராசரியுடன் 479 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பந்தயத்தில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 11 போட்டிகளில் 576 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை: வெல்லப்போவது யார்?
காலை இளையராஜா; இரவில் ஏ.ஆர். ரகுமான்: கவிஞர் யுகபாரதியின் சிலிர்ப்பு அனுபவம்!