ஐசிசி டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்று எதிர்பாராத திருப்பங்களுடன் முடிந்துள்ளது.
இந்தியா 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
நேற்று (நவம்பர் 6 ) நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 186/5 ரன்கள் எடுத்தது. பின்னர் ஜிம்பாப்வேவை 115 ரன்களுக்குள் சுருட்டி வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இறுதிவரை களத்தில் நின்ற அவர், அதிகபட்சமாக 6 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 61 (25) எடுத்தார்.
கடைசி நேரத்தில் சூர்யகுமார் அதிரடி காட்டியதால் கடைசி 5 ஓவரில் 79 ரன்கள் குவித்து இந்தியா அசத்தியது. அதைவிட கடைசி ஓவரில் 18 ரன்கள் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
நேற்றைய போட்டியில் வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ்வை, “நீங்கள் ஏபி டி வில்லியர்ஸ் போல மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனாக செயல்படுகிறீர்கள்” என்று போட்டி முடிந்ததும் இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் பாராட்டினார்.

அதற்கு, ”உலகிலேயே ஏபி டி வில்லியர்ஸ் மட்டுமே 360 வீரர்” என்று சொன்ன சூர்யகுமார் யாதவ் ”உலகிலேயே 360 டிகிரியில் விளையாடக்கூடிய ஒரே ஒரு வீரர் மட்டுமே உள்ளார்” என்று கூறினார்.
அவரது இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி ஏபி டி வில்லியர்ஸ் கவனத்தை ஈர்த்தது.
அதனால் மகிழ்ச்சியடைந்த டிவில்லியர்ஸ், ”நீங்கள் அந்த இடத்திற்கு மிகவும் வேகமாக வந்து கொண்டிருக்கிறீர்கள். சொல்லப்போனால் 360 டிகிரி என்பதையும் தாண்டிய உச்சத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள்” என்று தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
இது பற்றி ஏபி டீவில்லியர்ஸ் நேற்று (நவம்பர் 6 ) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“நீங்கள் அங்கே மிகவும் விரைவாக வருகிறீர்கள் நண்பரே. இன்னும் அதிகமாக. இன்று மிகச் சிறப்பாக விளையாடினீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
ஏபி டீ வில்லியர்ஸ் கொடுத்த அந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆன்லைன் கடன் செயலி வழக்கு: ரிசர்வ் வங்கிக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பின் மீது மறுசீராய்வு அவசியம்: கி. வீரமணி