ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 12 வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டு மட்டும் தான் அந்த அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியவில்லை.
இந்நிலையில், இன்று(மே20) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 67 வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியிடம் உங்கள் அணி தொடர்ந்து எப்படி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த தோனி ”சிறந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறந்த சூழலை நாங்கள் வழங்குகிறோம். கிரிக்கெட்டில் அவர்களுக்கு ஏதேனும் குறை இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய நாங்கள் முயற்சி செய்கிறோம்.
அணிக்கு எது சிறந்ததோ அதை மட்டும்தான் நாம் செய்ய வேண்டும்.மற்றொரு காரணம் எங்கள் அணி நிர்வாகம் தான். நாங்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் கூட எங்களை கவலைப்படாதீர்கள் நீங்கள் தொடர்ந்து எதை செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் முடிவுகள் தானாக வரும் என்று கூறுவார்கள். எங்கள் அணியின் இறுதி கட்ட ஓவர் வீசும் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்” என்றார்.
மேலும், “துஷர் தேஷ்பாண்டே முதலில் விளையாடிய போட்டிக்கும், இப்போது விளையாடும் போட்டிகளுக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. நெருக்கடியான சூழலில் எவ்வளவு முறை நீங்கள் சரியான திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறீர்கள் என்பதே முக்கியம். நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கையாக இருந்தால் நிச்சயமாக வகுக்கும் திட்டத்தை களத்தில் செயல்படுத்துவீர்கள்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய எம்.எஸ்.தோனி, “திரை மறைவுக்குப் பின் கடின உழைப்பு நிச்சயம் இருக்கிறது. எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய பொறுப்பை அவர்களாக ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார்கள். பதிரானா இயற்கையாகவே சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். எனவே அவர் இறுதிக் கட்டத்தில் பந்து வீசும் போது எனக்கு தலைவலி குறைகிறது. வீரர்கள் எப்போதுமே அணிதான் முதலில் முக்கியம் என்ற கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும்.
இது போன்ற எண்ணத்தை உடைய வீரர்களை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களுடைய சூழலுக்கு தகுந்தார் போல் அவர்கள் மாற நாங்கள் நினைக்கிறோம். அதில் அவர்கள் 10 சதவீதம் முனைப்பை காட்டினால் கூட நாங்கள் அவர்களுக்காக 50% முனைப்பு காட்டுவோம். நாக் அவுட் போட்டிகளில் சரியாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும்” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மதுவை விற்று சம்பாதிக்கும் திமுக அரசு: அண்ணாமலை சாடல்!
சிஎஸ்கே வீரர்களை சூழ்ந்த ரசிகர்கள்:வைரல் வீடியோ!