“வங்கதேச அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிப்பதில் இந்திய அணியின் ஆட்டக்காரர்கள் முன்னேற்றத்தைக் காண வேண்டும்” என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
நேற்று (டிசம்பர் 4) நடைபெற்ற இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வங்கதேச அணி வீழ்த்தியது
டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள், வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்பமான ரன்களில் ஆட்டமிழந்தனர்.
41.2 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது. வங்கதேசத்தின் இடது கை பந்துவீச்சாளர் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளையும்,
ஆஃப் ஸ்பின்னர் மிராஜ் 1 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணி வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, ஆட்டத்தின் தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி வந்தது.
136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணியை, கடைசியாக களமிறங்கிய ஹசன் மிராஸ் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஜோடி 51 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இதனால் 46 ஓவர்களில் வங்கதேச அணி 187 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா, “ஆடுகளம் சற்று சவாலாக இருந்தது. வங்கதேச வீரர்களின் சுழற்பந்தை சமாளிப்பதில் இந்திய அணியின் ஆட்டக்காரர்கள் முன்னேற்றம் காண வேண்டும்.
இந்த ஆட்டத்தில் நாங்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை.
இன்னும் 30 – 40 ரன்கள் எடுத்திருந்தால் வங்கதேச அணிக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்போம்.
இந்திய அணி வீரர்கள் நன்றாக பந்துவீசி வங்கதேச அணி வீரர்களை கடைசி வரையில் அழுத்தத்தில் வைத்திருந்தார்கள்.
கடைசி ஓரு விக்கெட்டை எடுப்பது எங்களுக்கு சவாலாக இருந்தது. தோல்வியிலிருந்து நாங்கள் படிப்பினைக் கற்றுக்கொண்டோம்.
அடுத்த போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
தீ தளபதி பாடல்: மோதலில் ரசிகர்கள் பதிவு!
ஜி 20 தலைமை: பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னொரு சாதனம்?