ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் நேற்று பாகிஸ்தான், இலங்கை இரு அணிகளும் 252 ரன்கள் அடித்தன. ஆனால் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு தீர்வு காணும் விதமாக அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
இலங்கையின் கொழும்பு பிரமேதாசா மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 14) நடந்த சூப்பர் 4 போட்டியில் ’எப்படியும் வென்றாக வேண்டும்’ என்ற மனநிலையில் தான் பாகிஸ்தானும், இலங்கையும் களமிறங்கின.
ஆனால் மழை அதற்கு குறுக்கீடாக இருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்னரே பெய்த மழையால் ஆட்டம் 2.15 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி முதலில் 45 ஓவராக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 27.4 ஓவர்களில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் மீண்டும் மூன்று ஓவர் குறைக்கப்பட்டு, 42 ஓவர்களில் விளையாட இரு அணிகளும் ஒப்புக்கொண்டன.
முடிவில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணியும் 252 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
காரணம் என்ன?
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 42 ஓவர்களில் 252 ரன்களை எடுத்த நிலையில், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி, ஸ்கோரில் இருந்து 1 ரன் குறைக்கப்பட்டது.
மழையால் பாதிக்கப்படும் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணி தொடக்க வீரர்களின் விக்கெட்டை இழக்காமல் இருப்பதும், பெரிய ஸ்கோர் குவிப்பதும் முக்கியமானது.
ஏனென்றால் ஆட்டத்தின் நடுவே டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இரண்டாவதாக விளையாடும் அணிக்கு இலக்கு நிர்ணயிப்பதில் முதலில் விளையாடும் அணியின் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கும்.
ஆனால் போட்டிக்கு நடுவே மீண்டும் மழை பெய்வதற்கு முன்னதாகவே முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ஒருவேளை 28வது ஓவரில் பாகிஸ்தானின் முகமது நவாஸின் விக்கெட்டை இழக்காமல் இருந்திருந்தால், இலங்கையின் இலக்காக 255 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் நவாஸ் விக்கெட்டுடன் 27.4 ஓவர்களில் 130 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது பாகிஸ்தான்.
எனவே டக்வொர்த் லூயிஸ் விதிப்படி, பாகிஸ்தான் அணியின் ஸ்கோரில் 1 ரன் குறைக்கப்பட்டு போட்டியில் வெற்றி பெற இலங்கைக்கு 252 ரன்கள் தேவை என நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி கடைசி பந்து வரை சென்ற போட்டியில் இலங்கை அணி 252 ரன்கள் குவித்த நிலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கிறிஸ்டோபர் ஜெமா
பாகிஸ்தானுக்கு படுகுழி வெட்டிய சிஎஸ்கே வீரர்கள்.. ஆனால் இந்தியாவுக்கு ஜாலி!
Asia cup: கடைசி பந்தில் இலங்கை அணி த்ரில் வெற்றி… பாகிஸ்தான் ஏமாற்றம்!