பிஃபா வரலாற்றில் முதன்முறையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் ($220 பில்லியன்) நடத்தப்படும் உலகக்கோப்பை போட்டியாக கத்தார் உலகக்கோப்பை 2022 பார்க்கப்படுகிறது.
நவம்பர் 20ம் தேதி கத்தாரில் 22வது கால்பந்து உலகக்கோப்பை தொடர் அட்டகாசமாக தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் தொடரை நடத்தும் கத்தார், ஈக்வடார் அணியை அல்பேத் மைதானத்தில் எதிர்கொண்டது. எனினும் 92 ஆண்டுகால கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக போட்டியை நடத்தும் கத்தார் அணி 2-0 என்ற கணக்கில் ஈக்வடார் அணியிடம் தோற்றது.
இதனை தொடர்ந்து எதிர்பார்ப்புகள் நிறைந்த பெரிய அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டிகள் இன்று முதல் டிசம்பர் 18ம் தேதி வரை நடக்க இருக்கின்றன. இதன்காரணமாக பரபரப்பு நிறைந்த போட்டிகளை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் கத்தாருக்கு குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் போட்டியின் மொத்த பட்ஜெட், எதிர்பார்க்கப்படும் வருவாய், டிக்கெட் விலை மற்றும் பல போன்ற சுவாரஸ்யமான தகவல்களை இங்கு காணலாம்.

FIFA உலகக் கோப்பை பட்ஜெட்!
கடந்த 2010 ஆம் ஆண்டில் 2022ம் ஆண்டு உலகக்கோப்பையை நடத்துவதற்கான உரிமையை கத்தார் பெற்றது. இதனையடுத்து கடந்த 12 ஆண்டுகளாக கத்தாரில் உலகக்கோப்பை தொடரை பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க கத்தார் அரசு தீவிரமாக செயல்பட்டு வந்தது.
உலகத்தரம் வாய்ந்த மைதானங்களை புதுப்பித்தல் மற்றும் கட்டுதல், விமான நிலையங்களை மேம்படுத்துதல், சாலைகளை புனரமைத்தல், ஹோட்டல்களுடன் கூடிய புதுமையான மையங்கள் மற்றும் அதிநவீன போக்குவரத்திற்கும் சேர்த்து கத்தார் அரசு இதுவரை 220 பில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது.
கத்தார் நாட்டின் நிதி அமைச்சர் கூறுகையில், தயாரிப்பு பணியின் போது, வாரந்தோறும் 500 மில்லியன் டாலர்கள் செலவழித்ததாக தெரிவித்துள்ளனர்.
2018ல் போட்டியை ஏற்பாடு செய்ய ரஷ்யா 11.6 பில்லியன் டாலரும், 2014ல் பிரேசில் $15 பில்லியன் டாலரும் செலவிட்டுள்ளது.
அமெரிக்க விளையாட்டு நிதி ஆலோசனை நிறுவனமான ஃப்ரண்ட் ஆபிஸ் ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையின் படி, “தோஹாவில் மட்டும் சுமார் 15 பில்லியன் டாலர்கள் ‘தி பேர்ல்’ என்று அழைக்கப்படும் தங்குமிட வளாகத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. தோஹா மெட்ரோவுக்கு $36 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், 2022ம் ஆண்டு உலகக்கோப்பை ஏலத்தின்போது முன்மொழியப்பட்ட பட்ஜெட்டாக 4 பில்லியன் டாலர்கள் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை மூலம் வருவாய்!
இவ்வாறு பில்லியன் கணக்கில் உலகக்கோப்பை தொடருக்காக செலவழித்துள்ள கத்தார். இதற்கான வருவாயையும் கணக்கில் கொண்டுள்ளது. இதுவரை கத்தாரில் உள்ள 8 மைதானங்களில் மொத்தம் 30 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிக்கான சாதனை வருவாயைப் பெறும் என்று உறுதியாகியுள்ளது. இது 2018 ஆம் ஆண்டில் ரஷ்யா ஈர்த்த வருமானம் 5.4 பில்லியன் டாலர்களை விட அதிகமாக இருக்கும்.

உலகக் கோப்பை டிக்கெட் விலை!
2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பைக்கு, ரசிகர்கள் ஒரு இருக்கைக்கு சராசரியாக £214 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ₹20,700) செலுத்தினர்.
கத்தாரில் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு சராசரியாக £286 பவுண்டுகள்(இந்திய மதிப்பில் ரூ.27,000) செலவாகிறது. இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு இருக்கைக்கு £684 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.66,200) என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கத்தாரில் உலகக்கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விலைகள் ஏற்கெனவே விற்கப்பட்ட டிக்கெட்டுகளை விட சுமார் 40% அதிகம். இது கடந்த 20 ஆண்டுகளில் உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு டிக்கெட் விலை உயர்ந்துள்ளதை குறிப்பிட்டுள்ளது.
இதுவரை மூன்று மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்ட நிலையில், கத்தார் 2022 டிக்கட் விற்றதற்கான மொத்த வருவாய் சுமார் $1 பில்லியன் ஆகும்.
இவற்றுடன் டிக்கெட், ஹோட்டல் என்ற பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய 2,40,000 பேக்கேஜ் டிக்கெட்டுகளையும் இதுவரை பிபா விற்பனை செய்துள்ளது.
அதன் அடிப்படையில், இந்த உலகக்கோப்பை தொடரின் மூலம் கத்தார் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய அனைத்து போட்டிகளையும் விஞ்சும்.
மேலும் 2002 இல் கொரியா மற்றும் ஜப்பான் நடத்திய தொடரின் மூலம் பெற்ற வருமானத்தை விட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
திங்கள், புதன், வியாழன்: அங்கன்வாடிகளில் இனி 3 முட்டை!
நீலகிரி மக்களவை வேட்பாளர் எல்.முருகன்: மோடி திட்டத்தை வெளியிட்ட அண்ணாமலை